அந்த "ஒரே" வார்த்தைதான்.. ஜெர்க் ஆகி.. எகிறி யூடர்ன் அடித்த தேமுதிக.. மீண்டும் பேச்சுவார்த்தையா?
சென்னை: அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் அக்கட்சியுடனேயே பேச்சுவார்த்தையை தொடரலாமா என்று தேமுதிக யோசித்து வருகிறதாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை எடுபடவில்லை.. பலமுறை அமைச்சர்கள் பேச்சு நடத்திய நிலையில், 13 சீட்கள் + ராஜ்ய சபா சீட் தர அதிமுக முன்வந்தது..!
ஆனால், கூடுதல் சீட்டுகளுடன் தேர்தல் நிதியும் வேண்டும் என்று கேட்கவும், அத்துடன் பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்தி கொண்டது.
விளக்கை அணைத்து விட்டு.. இருட்டில் நின்று பேசிய சீமான்.. வழக்கு பதிவு செய்த போலீஸ்!

பேச்சுவார்த்தை
பிறகு கூட்டணியில் இருந்து விலகி, அமமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தேமுதிக.. அங்கும் 32 சீட் வரை ஓகே ஆன நிலையில், தேர்தல் செலவுக்கு பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதனாலேயே 3 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையும் அப்படியே நின்றுவிட்டது. இதில் தேமுதிகவை கொண்டு வர தினகரன் தரப்பு பெரும் முயற்சி எடுத்ததையும் சொல்ல வேண்டி உள்ளது.

லிஸ்ட் வெளியீடு
இதனிடையே, அமமுகவும் தன்னுடைய 3-ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று மாலை அறிவித்துவிட்டது.. அதாவது இதுவரை 195 பேர் வேட்பாளர்களாக அந்த கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. ஒவைசி கட்சிக்கு 3 சீட், எஸ்டிபிஐ கட்சிக்கு 6 சீட், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள், என மொத்தம் 208 தொகுதிகளுக்கும் லிஸ்ட் வெளியாகியாயிற்று.

சீட்
அதனால்தான், தேமுதிகவுக்கு சீட் தரும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை முன்கூட்டியே கூட்டணி முடிவாகி இருந்தால், சீட்டுக்களும் கணிசமாக தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சுதீஷ்
அதுமட்டுமல்ல, பேச்சுவார்த்தையின்போது, முதல்வர் வேட்பாளர் விவகாரமும் வெடித்துள்ளதாக தெரிகிறது.. "முதல்வர் விஜயகாந்த்" என்று சுதீஷ் அன்றைக்கு ட்வீட் போட்டிருந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக தினகரனை ஏற்றுக்கொள்வதிலும் தேமுதிகவுக்கு தயக்கம் உள்ளதாம்.. எனினும், தனித்து போட்டியிடவும் முடியாமல், கூட்டணிகள் யாருமே ஒப்புக் கொள்ளாமலும் தேமுதிக திணறி வருவதாக தெரிகிறது.. இதனால் மறுபடியும் அமமுகவுடனேயே பேச்சுவார்த்தையை தொடங்கலாமா என்ற யோசனையிலும் உள்ளதாம்..

கமல்
அப்படியே பேசினாலும், 208 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிகவுக்கு எத்தனை சீட் தர முடியும் என்பதும் கேள்விக்குறிதான். திமுகவில் 10 சீட் வரை தர முன்வந்திருக்கிறார்கள்.. ஆனால் தேர்தல் செலவு என்று பேச்செடுக்கவும்தான், அங்கு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. பிறகு, கமலிடம் கூட பேச்சை ஆரம்பித்தார்களாம்.. "தேர்தல் செலவுக்கு எங்களுக்கு எவ்வளவு தர போகிறீர்கள்" என்று மய்யத்தில் கேட்கவும், அப்படியே யூடர்ன் போட்டு திரும்பி வந்துவிட்டதாம் தேமுதிக..!