சுடச்சுட ரெடியான லிஸ்ட்! திமுக 110 பொறுப்பாளர்கள் யார்? யார்? ஸ்டாலின் கையில் பட்டியல்! எப்போ ரிலீஸ்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நடப்பதாக சொல்லப்படும் நிலையில், தற்போது 110 பொறுப்பாளர்களின் பட்டியல் தயாராகிவிட்டதாம். அந்த பட்டியல் எப்போது வெளியாகும் என்ற தகவல் அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வுகளில் சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்க முடிவு செய்தது. தற்போது திமுகவில் செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தும் வகையில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
திமுக மறுசீரமைப்பு
இதனால் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற கட்சிக்குள் போட்டி அதிகரித்துள்ளது. இந்த சூழலில், புதிய மாவட்ட செயலாளர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களை இளைஞர் அணியில் இருந்து நியமிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கனிமொழி
ஆனால், மாவட்ட செயலாளர்களை நேரடியாக நியமிப்பதற்கு பதிலாக, கட்சிக்குள் ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை கனிமொழி முன்வைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பதவிக்கு தொண்டர்களிடையே செல்வாக்கு பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே கட்சியை அடிமட்டத்தில் இருந்து மீண்டும் வலுப்படுத்த முடியும் என்பதே இந்த தரப்பின் வாதமாக இருந்ததாக தெரிகிறது.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் மாவட்டங்கள் பிரிப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட செயலாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உதயநிதி தரப்பின் கோரிக்கைக்கு பதிலாக கனிமொழி தரப்பு முன்வைத்த ஜனநாயக முறையிலான தேர்தல் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலின் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாவட்ட பொறுப்பாளர்கள்
இது எல்லாம் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்க மற்றொரு புறம் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் பரபரப்பாக தயாராகி வருகிறது. ஏற்கனவே திமுக புதிய மாவட்டங்களின் பட்டியல், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகிறது என தெளிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. திமுக தலைமை அதுமட்டுமல்லாமல் 110 மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியங்கள், நகரங்கள், பேரூர், கிளை உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயற்குழு மூலம் முடிவு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், இதற்கு 15 நாட்கள் கெடு விதித்து இருக்கிறது திமுக தலைமை.
மாவட்ட செயலாளர்கள்
திமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடத்தி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இது கட்சி விதி. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்டு போட்டியின்றி தேர்தல் மூலம் அவர்கள் தேர்வாகி வருகின்றனர். ஏற்கனவே சொன்னது போல இது தொடர்பாக திமுகவுக்குள் இரு அணிகள் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம் பல ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் தொடர்ந்து வருகிறது.
திமுக முப்பெரும் விழா
மாவட்ட பொறுப்பாளர்களே மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனியர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் ரெடி ஆகிவிட்டதாம். 110 பேர் கொண்ட பட்டியலில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பட்டியல் தயாராகி இருக்கும் நிலையில் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. செப்டம்பர் 17ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற இருக்கும் நிலையில், அங்கு இந்த பட்டியல் வெளியாகும் எனவும், 110 பேரையும் மேடையில் ஏற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்துவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
