சும்மா இருந்தவரை சீண்டி.. சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த ‘கழகங்கள்’.. விஜய்க்கு ஆதரவாக அனுதாப அலை!
சென்னை: அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கும் ஒரே கேள்வி. விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பாரா? இல்லையா? என தமிழகம் முழுவதுமே ஒரு பரபரப்பில் தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் விஜய் ஆட்சி அமைப்பது மதில் மேல் பூனையாக இருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை இரு திராவிட கட்சிகளும் தவற விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
பாஜக வரக் கூடாது என விஜய்க்கு திமுக வெளியில் இருந்து ஆதரவளித்திருக்கலாம் அல்லது திமுக ஆட்சிக்கு வரவே கூடாது என அதிமுக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தந்திருக்கலாம். ஆனால் இரு கழகங்களும் அமைதியாக இருந்து, தமிழகத்தில் இன்னொரு தேர்தல் நடக்கும் சூழலை உருவாக்கி விட்டன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது யாராலும் கணிக்க முடியாத திருப்பங்களை சந்தித்து வருகிறது. தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட முடியவில்லை.
இதனால் "விஜய் முதல்வராக பதவியேற்பாரா? இல்லையா?" என்ற கேள்வி தான் தமிழகம் முழுவதும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் நடந்த மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், பல தசாப்தங்களாக தமிழக அரசியலை கட்டுப்படுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, புதிய அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்திருப்பதே. இதை பல அரசியல் பார்வையாளர்கள் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் என்கின்றனர்.
ஆனால் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர் ஆதரவு தவெகவுக்கு இல்லை. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவை பெற விஜய் தரப்பு முயற்சியில் இறங்கியது. காங்கிரஸ் கட்சியும் தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கத் தயார் என அறிவித்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடனும் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த ஆதரவுகளுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய். அதே நேரத்தில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என்ற தகவல்களும் பரவின. சில இடங்களில் விழா ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் "விஜய் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்" என்ற எதிர்பார்ப்பு தவெக ஆதரவாளர்களிடையே உருவானது. ஆனால் அரசியல் களம் திடீரென வேறு திசைக்கு மாறியது.
ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்காதது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில், "தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை திமுகவும் அதிமுகவும் தவறவிட்டுவிட்டன" என்ற கருத்து அரசியல் விமர்சகர்களிடம் வலுப்பெற்று வருகிறது. பாஜக ஆட்சியில் பங்கேற்கக் கூடாது என்ற நோக்கில் திமுக, வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என ஒரு தரப்பு கூறுகிறது.
அதேபோல், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கணக்கில் அதிமுக, விஜய்க்கு ஆதரவு கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இரு கட்சிகளும் நேரடி முடிவெடுக்காமல் அமைதியாக இருந்து வருவது, தமிழகத்தை இன்னொரு தேர்தல் நோக்கி தள்ளும் சூழலை உருவாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
அரசியலமைப்பு நடைமுறைகளின்படி, ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் அதிகார வரம்புக்குள் வரும். அதே நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபைதான் என்பதும் முக்கியமான அம்சம். இதனால், "முழு ஆதரவு கடிதங்களையும் முதலில் காட்டினால்தான் பதவியேற்பு" என்ற நிலைப்பாடு குறித்து பல்வேறு சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நீதிபதிகள் சிலர், "யாருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில், தனிப்பெரும் கட்சியை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்குவது அரசியல் மரபு" என கூறுகின்றனர். அதேசமயம், "ஆதரவு எண்ணிக்கை குறித்து ஆளுநர் விளக்கம் கேட்பதும் தவறில்லை" என்ற கருத்தும் நிலவுகிறது.
தேர்தலுக்கு முன் விஜயை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பல அரசியல் கட்சிகள், தற்போது அவரது எழுச்சியை புறக்கணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆட்சியமைக்க முடியாமல் சிக்கலில் இருந்தாலும், அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலை உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
"தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?" என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்படுகிறது. இதனால், அரசியலை தாண்டி உணர்ச்சி சார்ந்த ஆதரவும் விஜய்க்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications