சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்ஹாசன் கூட்டணிக்கு.. ஸ்டாலின்-எடப்பாடி "சேர்ந்து வைத்த" பெரிய செக்! என்ன செய்யும் மூன்றாவது அணி?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மூன்றாவது அணி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக, ஒரு வகையில் தெரிந்தோ, தெரியாமலோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் யதார்த்தத்தில் அதுதான் நடக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பொதுவாக, தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரு கட்சிகள் தலைமையிலான கூட்டணியில் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அண்ணா தலைமையில் முதல் முறையாக திமுக ஆட்சியை பிடித்தது முதலும், எம்ஜிஆர் அதிமுக கட்சியை துவங்கியது முதலும் இப்படித்தான் நடக்கிறது தமிழகஅரசியல்.

இப்பவே அதிகாரத்தை கொடுங்க... சக்கரநாற்காலியில் உட்கார்ந்த பிறகு கொடுக்காதீங்க - சீமான் இப்பவே அதிகாரத்தை கொடுங்க... சக்கரநாற்காலியில் உட்கார்ந்த பிறகு கொடுக்காதீங்க - சீமான்

அதிலும், கடந்த 20 வருடங்களாக, இரு கட்சிகளுக்கும் கூட்டணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. என்னதான் கூட்டணியாக இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும். அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் முதல்வராக அமருவார்கள்.

இலவச டிவி திட்டம்

இலவச டிவி திட்டம்

கூட்டணிக்கு எப்படி முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதேபோல இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. அதிலும், இந்தியாவே வியந்து பார்த்த ஒரு தேர்தல் அறிக்கை என்றால் 2006ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கை. அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் என்ற அவரது அறிவிப்பு சாத்தியமே இல்லாதது என்று பலரால் சத்தியம் செய்யப்பட்டது. ஆனால், அந்த தேர்தல் அறிக்கையை, கதாநாயகன் என்று வர்ணித்தார் கருணாநிதி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இலவச தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கி இந்தியாவுக்கே, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்று சொல்லலாம்.

ஜெயலலிதா அரசியல்

ஜெயலலிதா அரசியல்

இதன்பிறகு ஜெயலலிதாவும் அதே போன்ற பாணியை கையில் எடுக்க ஆரம்பித்தார். இலவச மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி, என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதன் காரணமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் என்னமாதிரி இலவச அறிவிப்புகளை வெளியிட போகின்றன என்பதை பார்த்து ஓட்டு போட மக்கள் பழகி விட்டனர்.

 ஓட்டு போடும்போது மக்கள் மனநிலை

ஓட்டு போடும்போது மக்கள் மனநிலை

தேர்தலில் வாக்களிக்கப் போகும்போது இரண்டு விஷயங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒன்று.. தேர்தல்அறிக்கை, இன்னொன்று கடைசி நேரத்தில் நடைபெறும் பணப்பட்டுவாடா. மூன்றாவதுதான் கட்சிகள் மீதான வெறுப்பு மற்றும் வெறுப்பு ஆகியவை பங்காற்றுகின்றன.

இரு தலைவர்களுக்கும் முக்கியம்

இரு தலைவர்களுக்கும் முக்கியம்

இந்த தேர்தல் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் தமிழகம் சந்திக்கப்போகும் தேர்தலாகும். எனவேதான் அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் முன்பு அடிக்கடி கூறி வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் இத்தேர்தல் ஒரு அக்னி பரிட்சை. தங்கள் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய தேர்தல் என்பதுதான் பெருவாரியான அரசியல் பார்வையாளர்கள் கணிப்பு.

மூன்றாவது அணி வெற்றி வாய்ப்பு

மூன்றாவது அணி வெற்றி வாய்ப்பு

அரசியலில் வெற்றிடம் இருப்பது இருக்கிறது என்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் மூன்றாவது அணி வேகமாக வலுவாக அமைக்கப்பட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் அணி முக்கியமானது. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளன. கமல்ஹாசனுக்கு இயல்பாகவே மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. பெரிய திரை மட்டுமல்லாது, பிக்பாஸ் மூலம் சின்னத்திரை வாயிலாக பெண்கள் மத்தியிலும் செல்வாக்கு நிலவுகிறது. அவரது பிரச்சாரங்களும் மிகவும் ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஸ்டாலின் திடீர் அறிவிப்பு

ஸ்டாலின் திடீர் அறிவிப்பு

இப்படியாக, மூன்றாவது அணி வலுப்பெற்று வரும் நிலையில்தான், ஸ்டாலின் திடீரென திருச்சி பொதுக்கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை தயாராகி வரும் நிலையில், முன்கூட்டியே இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான் பல அரசியல் பார்வையாளர்கள் கேள்வியாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த தேர்தல் களம் திமுகவை சுற்றி தான் இருக்க வேண்டும். மூன்றாவது அணி பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் விரும்பியது தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர் நினைத்தது போலவே இந்த அறிவிப்பு சாதகமா, பாதகமா என்ற விவாதங்கள் அரசியல் களத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்தன.

முதல்வர் பதிலடி

முதல்வர் பதிலடி

இந்த நிலையில்தான், நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு மெகா அறிவிப்பு வெளியிட்டனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆறுமாதங்களுக்கு சிலிண்டர் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர் அவர்கள். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகிய இருவரும் மகளிர் வாக்குகளை குறிவைத்து இந்த அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டுள்ளனர்.

1500 லட்சியம், 1000 நிச்சயம்

1500 லட்சியம், 1000 நிச்சயம்

இதன்மூலம், தமிழக அரசியல் வெளிச்சமும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மீது மட்டுமே விழுமாறு இவ்விரு தலைவர்களும் நிலைமையை மாற்றி உள்ளனர். திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுக்கு ஓட்டு போட்டாலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு மேல் கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற மனநிலையை பெண்களிடம் ஏற்படுத்தி விட்டனர். எனவே, இருவரில் யாருக்கு ஓட்டு என்பது பற்றிதான் பேச்சு இருக்குமே தவிர மூன்றாவது அணி பற்றிய பேச்சு இருக்காது என்று இருவரும் நம்புகிறார்கள்.

இரு கட்சி அரசியல்

இரு கட்சி அரசியல்

இவர்கள் இருவருக்கும், இது முக்கியமான தேர்தல் என்பதால் இருவருமே போட்டி போட்டு கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டபடி உள்ளனர். இரு கட்சிகளுக்கும் தமிழகம் முழுக்க வலுவான கட்டமைப்பு இருப்பதால் மக்களிடம் இந்த வாக்குறுதிகள் எளிதாக சென்று சேருகின்றன. எனவே, தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மட்டும்தான் கோலோச்ச முடியும் என்ற நிலைமையை, தெரிந்தோ, தெரியாமலோ, எடப்பாடியார் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.

 மூன்றாவது அணி

மூன்றாவது அணி

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புபடி ம.நீ.ம 5 மற்றும் அமமுக சுமார் 3 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறின. இது அவை கூட்டணி அமைக்கும் முன்பு எடுத்த சர்வே. இப்போது அவை கூட்டணி அமைத்துள்ளன, அப்படியான வலுவான போட்டியை 3வது அணி உருவாக்கி வரும் நேரத்தில், ஸ்டாலின் மற்றும் எடப்பாடியார் வெளியிட்ட அறிவிப்புகள், மூன்றாவது அணிக்கு வலுவான சவாலாக மாறியுள்ளது. இதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு மக்களிடம் செல்வாக்கை பெற முடியும் என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் சஸ்பென்ஸ்.

English summary
DMK and AIADMK both are announcing schemes for housewife, which will reduce the winning chance of third front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X