சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீயே அயிரைமீன்- விலாங்குச் சேட்டை ஏன்? அறநிலையத்துறை விவகாரத்தில் அண்ணாமலை மீது முரசொலி அட்டாக்!

அறநிலையத்துறை இலாகாவையே அகற்றுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதை திமுகவின் முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என முதல் கையெழுத்திடுவோம் என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்" என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். வரப்போவது இல்லை, அடுத்த தேர்தலில் தனித்து நின்றால் இருக்கும் நான்கு தொகுதியும் போய்விடும் என்பது அனைவர்க்கும் தெரியும். 'நீயே அயிரைமீன்... உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?' என்று ஒரு பழமொழி உண்டு.

பாஜகவுக்கு இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் ஆளுநர் வேட்டு- தமிழ்நாடு விவகாரத்தில் முரசொலி சாடல் பாஜகவுக்கு இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் ஆளுநர் வேட்டு- தமிழ்நாடு விவகாரத்தில் முரசொலி சாடல்

தமிழ்நாட்டில் மொத்தம் 46,022 திருக்கோயில்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பட்டியலிடப் பட்ட திருக்கோயில்களின் எண்ணிக்கை 9,190 என்றும், பட்டியலிடப்படாத திருக்கோயில்களின் எண்ணிக்கை 36,832 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமணத் திருக்கோயில்கள் (22), திருமடங்கள் (45), திருமடத்துடன் இணைந்த கோயில்கள் (68), அறக்கட்டளைகள் (1,264), குறிப்பிட்ட அறக்கட்டளைகள் (1,127) ஆகியனவும் அடங்கும். இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகின்றனர். இந்தத் துறையோடு இணைந்த கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 6 கல்லூரிகளும், 48 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை மிகமிகச் சிறப்பாக கண்காணிக்கப்பட்டு கண்ணும் கருத்துமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன என்பதை அனைவரும் அறிவார்கள்.

DMK Daily Murasoli condemns Annamalai comments against TNHRCE

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. உள்துறை, தொழில் துறைக்கு அடுத்து இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டுள்ளேன் என்று முதலமைச்சர் அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

சனவரி முதல் வாரத்தில் 1250 கிராமப்புறக் கோயில்கள் -- 1250 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்குதல் என்ற வகையில் மொத்தம் 2500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான ஆன்மிகப் பெரியவர்கள், அருள் நெறியாளர்கள் இதில் கலந்து கொண்டு முதலமைச்சரை வாழ்த்தினார்கள்.

'முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோவில்களின் விடியலுக்கும் வழிகாட்டியாக உள்ளது" என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் பாராட்டினார்கள்.

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர்குழுவால் அனுமதி வழங்கப் பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களை சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை. கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

DMK Daily Murasoli condemns Annamalai comments against TNHRCE

* 2021--2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலம் 3,769 திருக்கோயில்களில் திருப்பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

* 2022--2023 ஆம் ஆண்டிற்கான 165 அறிவிப்புகளில் 135 அறிவிப்புகளின் மூலம் 2,578 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழக ஆட்சி மலர்ந்ததற்குப் பிறகு ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை அவைத்தும் சிலரது கண்ணை உறுத்துகிறது. இப்படி எல்லாம் செய்யப்படுவது ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. இருட்டாக இருக்கும் இடத்தில் விளக்குப் போட்டுவிட்டால் சிலருக்குப் பிடிக்காது. அத்தகைய சக்திகள்தான் அறநிலையத் துறைக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்.

''அறநிலையத் துறையை ஒப்படை என்றால் யாரிடம் ஒப்படைப்பது? யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்?" என்று அமைச்சர் சேகர் பாபு அவர்கள் மிகச் சரியான கேள்வியை எழுப்பி உள்ளார். அரசாங்கச் சொத்தை தனியார் சொத்தாக மாற்ற நினைக்கும் முயற்சிதான், அறநிலையத் துறைக்கு எதிரான அவதூறுகள் ஆகும்.

இந்தத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் கூடுதலாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசனையாகவும் சொல்லி வருகிறார்கள். அந்த ஆலோசனைகளையும் துறை செய்து, செயல்படுத்தி வருகிறது. இதனை கெடுக்க நினைப்பவர்கள் தான் இதுபோன்ற அவதூறுகளை விதைக்கிறார்கள். கெடுக்க நினைப்பவர்களின் உள்நோக்கத்தை அண்ணாமலை உணர வேண்டும். அவர்களுக்கு அவர் பலியாடு ஆகிவிடக்கூடாது.

DMK Daily Murasoli condemns Annamalai comments against TNHRCE

கோவில்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை, ஒவ்வொரு கோவிலையும் சில தனிநபர்கள் சூறையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை 1920 ஆம் ஆண்டுகளில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னவர்களே பக்தர்கள்தான். மதுரையைச் சேர்ந்த தரும இரண்டன சபை அல்லது அறக்கட்டளை பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு 1907 முதல் வலியுறுத்திவந்த கருத்து. பெரும்பாலும் பார்ப்பன வழக்கறிஞர்கள் இருந்த அமைப்பு இது. இந்த கோரிக்கையைத்தான் பழுத்த பக்தரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த சட்டமுன்வடிவை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய சட்டமன்றத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்த என்.கோபாலசாமி அய்யங்கார் அவர்கள். இவர் பிற்காலத்தில் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார். நீதிக்கட்சி காலத்தில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக (1912 -21) இருந்த சர்.டி.சதாசிவ அய்யர் அவர்கள்.

இன்றைக்கு எந்தத் துறையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார்களோ - பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்தத் துறையைக் கலைக்கும் முதல் கையெழுத்தைப் போடுவோம் என்கிறார்களோ - அந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல் தலைவராக இருந்தவர் சர்.டி.சதாசிவ அய்யர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

English summary
DMK Daily Murasoli has condemned for the Tamilnadu BJP President Annamalai's comments against TNHRCE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X