சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க பேசும் ஆரிய வேதங்கள் தமிழ் மண்ணில் வேகாது.. ரொம்ப கஷ்டம்.. ஆளுநர் ரவிக்கு முரசொலி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: நீங்க பேசுவது ஆரிய வேதங்கள் தமிழ் மண்ணில் வேகாது.. ரொம்ப கஷ்டம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்துள்ளது ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.

முரசொலியில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதிர்த்த ஒரு கருத்துக்கு எதிராக தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்."ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு அவர் பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.ரவி இப்படி பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகிவிட்டு இது போன்ற கருத்துக்களைச் சொல்லட்டும். மாறாக அப்பொறுப்பில் இருந்து கொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள். இதனை விட நாகரிகமாகச் சொல்ல முடியாது.

யப்பா இன்னொரு அண்ணாமலையா.. தமிழக பாஜக தாங்காது.. ஆளுநர் மீது முரசொலி பாய்ச்சல் யப்பா இன்னொரு அண்ணாமலையா.. தமிழக பாஜக தாங்காது.. ஆளுநர் மீது முரசொலி பாய்ச்சல்

 திட்டமிட்ட பேச்சுகள்

திட்டமிட்ட பேச்சுகள்

ஆளுநர் பேசும் பேச்சுகள், அவர் பேசியாக வேண்டிய பேச்சுகள் அல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடனே இத்தகைய பேச்சுகளை வலியப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவருக்கு இத்தகைய சிந்தனைகள் தொடக்க காலத்திலேயே இருந்திருக்குமானால் அவர் ஐ.பி.எஸ். என்ற பணிக்கே சென்றிருக்க மாட்டார். வேதகாலம், ரிஷி பாசம் இருக்குமானால் அவர் தனது கடந்த காலத்தை வேறு மாதிரியாகவே வடிவமைத்திருக்கக் கூடும்.மாறாக, இப்போது அவர் இதனைப் பேசுவது தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் காலம் காலமாக விதைக்கப்பட்ட அறநெறிகளுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வேதவெறி இந்தியாவைக் கட்டமைக்க நினைக்கும் சுயநல அரசியல் எண்ணங்களின் வெளிப்பாடாகவே அவரது உரைகள் அமைந்துள்ளன. அதற்காகவே அவர் இறக்கிவிடப் பட்டுள்ளார் என்பதே தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு பிந்தைய வரலாறு

ஆரியர் வருகைக்கு பிந்தைய வரலாறு

ஆளுநர் பேசுவது எல்லாம், ஆரியர் வருகைக்குப் பிந்தைய வரலாறு. அதற்கெல்லாம் முன்பே இங்கே தமிழ்நிலத்தில் இருந்த அறநெறிகளைப் புறந்தள்ளி அவர் பேசிக் கொண்டு இருக்கிறார். இயற்கையும் மனிதனும் மட்டுமே இருந்த சமூக அமைப்பு தமிழருடையது. நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் - என்கிறது தொல்காப்பியம். அதாவது நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய பொருட்களின் இயக்கமே உலகம் என்கிறது தொல்காப்பியம். இயக்கத்திலே உள்ள உலகமாக, உலகைப் பார்க்கிறது. நால் வருணத்தையோ, நால் வருணம் வலியுறுத்தும் ஆன்மீகவியலையோ தொல்காப்பியம் குறிப்பிடவில்லை. தொல்காப்பி யத்துக்கு உரை எழுதியவர்கள் மிகப் பிற்காலத்து வேதயியலை உள்ளே புகுத்தி உரை எழுதினார்கள்.

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்

தொல்காப்பிய மரபியலின் சில சூத்திரங்கள் மிகப் பிற்காலத்தில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்று தமிழறிஞர் வெள்ளைவாரணார் கருதுகிறார். அறிவு கொண்டு அறிதலே தமிழரது அறநெறியாக சங்க காலம் முதல் கருதப்பட்டது. 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ... கற்றல் நன்றே' என்கிறது புறப்பாடல். அதைத்தான் வள்ளுவர், 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்கிறார். அறிதல் முறையே அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்தது தமிழ் நிலத்தில். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா ... எனத் தொடங்கி
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - என முடிகிறது புறநானூற்றுப்பாட்டு. இதனை விட உலகியல் தத்துவம் வேறு இருக்க முடியுமா? பிறப்பினால் அல்ல, அறிவினால் அளவிட்ட சமூகம் தமிழ்ச் சமூகம். ஏழை - பணக்காரன் என்ற வர்க்க வேறுபாட்டைக் கூட இது வாழ்வின் மேடு பள்ளம் போன்ற நியதிதான் என ஏற்றுக் கொள்ள பக்குவப்படுத்தியது தமிழ் இலக்கியங்கள்.

இலக்கியங்கள் பேசுவது

இலக்கியங்கள் பேசுவது

'உன் தலையெழுத்து' என்று சொல்லவில்லை. ஊழையும் உப்பக்கம் காண்பர் என்றார் வள்ளுவர். 'தெய்வத்தான் ஆகாது எனினும்' ... முயற்சித்தால் முடிக்கலாம் என்றவர் வள்ளுவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்றும் வழிகாட்டியது வள்ளுவம். இரந்தும் உயிர் வாழ வேண்டிய நிலை வந்தால் பரந்து கெடுக உலக இயற்றியான் என்று முழங்கியவர் வள்ளுவர். கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில் தான் வேத, வேதியர் நெறிகள் அதிகமாக தமிழ்ச் சமூகத்தில் நுழைந்தது. வட்டாரப் பெருமை கொண்ட சாதிப் பெருக்கமும், அந்த சாதிக்கான உயர்வு தாழ்வும், அந்த உயர்வு தாழ்வுக்கான புனிதங்களும், அந்த புனிதங்களுக்கான காப்புரிமையை பார்ப்பணீயமும் பெறுகின்றன. வர்க்க வேறுபாட்டுடன் வர்ண வேறுபாடும் தலைதூக்கிய காலமாக அந்த பிற்காலம் அமைகிறது. அரசனை சமயச் சார்புள்ளவனாகவும், சமயக் காப்பானாகவும், பிற சமய வெறுப்பானாகவும் கட்டமைக்கும் இலக்கியங்கள் உருவாகியது.

சங்க இலக்கியமும் திராவிட இயக்கமும்

சங்க இலக்கியமும் திராவிட இயக்கமும்

சாதி கோவிலோடும், கோவில் மன்னரோடும் இணைக்கப்படும் காலமாக அது சிலரது தேவைக்காகக் கட்டமைக்கப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த இறையியலும், மெய்யியலும் தமிழ் நிலத்தில் வேறு. அதன் பிறகு அமைந்தவை வேறு. இந்த வேறுபாட்டை உணர வேண்டும். தமிழ்ப் பெருமை, தமிழர் பெருமை என நாம் பேசுவதில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை வேத நெறிகளுக்கு முந்தைய சங்க காலப் பெருமைகள் மட்டுமே. பக்தி இலக்கியங்களை பால்வடியப் பேசுபவர்கள், சங்க இலக்கியம் பக்கம் தலைவைத்துப் படுக்காததை கவனியுங்கள். சங்க இலக்கியத்தை திராவிட இயக்கம் தூக்கிப் பிடித்ததும் இதனால்தான். திருக்குறள் மாநாடுகளை பெரியார் அவர்கள் நடத்தியது சிலப்பதிகாரத்தை கலைஞர் அவர்கள் நாடகம் ஆக்கியதும் இதனால் தான்.

ஆரிய வேதங்கள் வேகாது

ஆரிய வேதங்கள் வேகாது

சித்தர்களைப் பற்றியும் ஆளுநர் பேசுகிறார். சித்தர்களை முழுமையாகப் படித்திருந்தால் தனது உரையில் சித்தர்கள் பற்றிச் சொல்லி இருக்க மாட்டார். சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர் பாட்டை ஆளுநர் படிக்கட்டும். நாம் பேசுவது தொல்காப்பியம், புறநானூறு, பத்துப்பாட்டு, திருக்குறள், மணிமேகலை, நீலகேசி, திருமந்திரம், சீவக சிந்தாமணி, சிவஞான சித்தியார். ஆளுநர் பேசுவது ஆரிய வேதங்கள், அத்வைதம், உபநிஷத், ஐதீகம், சனாதனம், வர்ணம், வர்ணாசிரமம் ஆகியவை ஆகும். இவை இங்கு வேகாது. மிகமிகச் சிரமம்!

English summary
DMK's official Daily Murasoli has slammed Tamilnadu Governor RN Ravi for Hindutva comments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X