“இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா?” - பரந்தாமன் அடுக்கடுக்காக கேள்வி!
சென்னை: "இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா? என போதைப்பொருள் வழக்கில் கைதான தவெக நிர்வாகிகளை பட்டியலிட்டு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகையில், அண்மையில் சுமார் 135 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வருவாய் புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெகவின் முக்கிய நிர்வாகி பூபாலன் வீட்டிலேயே போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதைக் கலாச்சாரத்தை ஒழிப்பேன் என முழங்கிய முதல்வர் விஜய் ஆட்சியில் அவரது கட்சியினரே, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் பேசுகையில், "திமுக ஆட்சியின்போது குற்றச் சம்பவங்கள் குறித்து பேசிய விஜய் முதல்வரானதும் இப்போது பேசவில்லை. மக்கள் முன்பு முதல்வர் பேச வேண்டும்; போதை தடுப்புக்காக குழு உருவாக்கினார்கள். ஆலோசனை நடந்ததா? நாகை தவெக நிர்வாகி பூபாலனிடம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அரசு பேசவில்லை.
இதுவரை 9 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா? Drugs Vetri Kazagam என குறிப்பிடும் நிலை தான் இந்த ஆட்சியில் இருக்கின்றது. நண்பா, நண்பீஸ் என்று அழைக்கும் முதல்வர், இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்.
தவெக நிர்வாகிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் முதல்வர் மௌனம் காக்கிறார். எங்கள் முதலமைச்சரைக் கேள்வி கேட்டீர்களே.. இப்ப ஏன் வாய் திறக்க மறுக்கிறீர்கள் முதல்வர் சார்?
2 தொகுதி இடைத்தேர்தலுக்கும் பூபாலனின் 'மெத்' போதைப்பொருள் விற்பனை பணம்தான் கைமாறியுள்ளது. தவெவுக்கு இதுபோன்ற குற்றவாளிகளிடம் இருந்துதான் பணம் வருகிறது. சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதில் பங்கு இருக்கிறதா? இல்லையா? கில்லி சரத்துக்கு கட்சிக் காரங்களே போதைப் பொருள் சப்ளை பண்றாங்களா?" என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
