திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி! மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தயாநிதி மாறன் தீவிரம்!
சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்டந்தோறும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளில் தயாநிதி மாறன் எம்.பி. தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் மாநில செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து மாவட்டச் செயலாளர்களோடு கலந்து பேசி விரைவில் விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் லிஸ்டை அவர் வெளியிடவுள்ளார்.

திமுக வரலாற்றில்
திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, சேலம் எம்.பி. பார்த்திபன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயாநிதிக்கு ஏமாற்றம்
திமுகவில் முக்கிய பதவியை எதிர்பார்த்த தயாநிதி மாறனுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தாலும் கூட, திமுகவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அணிக்கு முதல் மாநிலச் செயலாளர் தாம் என்பதால் அதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு காரியமாற்றத் தொடங்கியுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி தானே விளையாட்டாக இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து மிக சீரியஸாக களப்பணிகளை தொடங்கியுள்ளார்.

புதிய நிர்வாகிகள்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து லிஸ்டை கேட்டு வாங்கி அதிலிருந்து நிர்வாகிகள் நியமனத்தை நடத்தவுள்ளார் தயாநிதி மாறன். அநேகமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிர்வாகிகள் நியமனத்தை நடத்தி முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இளைஞர்கள்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் இளைஞர்களை மட்டுமே நிர்வாகிகளாக நியமனம் செய்வது என்பதில் தயாநிதி மாறன் எம்.பி. உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கபடி, கிரிக்கெட் போட்டிகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.