சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலங்கள், மாவட்டங்களை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் என்ற பிரிப்புகளை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என தனி சிறப்பு தீர்மானம் மூலம் திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தில் எத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற பட்டியலையும் திமுக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 'அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை திருத்திட வேண்டும்' என்று கொண்டுவந்து நிறைவேற்றிய தனிச்சிறப்பு தீர்மான விவரம்:

அரசியல் சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 70ஆம் ஆண்டு நிறைவடையும் நாளை எதிர்வரும் நவம்பர் 26ஆம் நாள் நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் அரசு கொண்டாடுகிறது. இந்நிகழ்வுக்குக் திமுக பொதுக்குழு தனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தருணத்தில் திமுக பொதுக்குழு அரசியல் சட்டம் தொடர்பான தனது கருத்துகளை மத்திய அரசின் முன் வைக்க விரும்புகின்றது.

அன்பழகனுக்காக மாற்றப்பட்ட விதி.. திமுகவில் ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்.. இதுதான் காரணம்!அன்பழகனுக்காக மாற்றப்பட்ட விதி.. திமுகவில் ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்.. இதுதான் காரணம்!

100 முறை திருத்தம்

100 முறை திருத்தம்

அரசியல் சட்டம் இதுவரை 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை, தி.மு.க. அவ்வப்போது எடுத்து வைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்து வந்திருக்கிறது. 1957ஆம் ஆண்டு முதன் முதலாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே, "மத்திய அரசுக்குத் தரப்பட்ட ஆட்சி அதிகாரங்களையும், வரி விதிப்பு அதிகாரங்களையும் குறைத்து அவற்றிற்கு வரம்பு கட்ட வேண்டும்" என்று அறிவித்தது.

மாநிலங்களவையில் அண்ணா

மாநிலங்களவையில் அண்ணா

மாநிலங்களவையில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், "நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை (Federal Form) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்பு (Unitary Form) கூடாது; கூட்டாட்சி அமைப்பு முறைதான் வேண்டுமென்று விரும்பினார்கள். உண்மையில் இந்தியா ஒரு துணைக் கண்டம் என அழைக்கப்படக் கூடிய அளவிற்கு பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்யப்பட்டதைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சி அமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பலதிறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

மாநிலங்களுக்கு சுயாட்சி

மாநிலங்களுக்கு சுயாட்சி

1974ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி முதல்முறையாக "மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" எனும் முழக்கத்தினை முன்வைத்தார். மேற்கண்ட இருபெரும் தலைவர்களின் கருத்துக்களை அரசியல் சட்டம் தோன்றி 70ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடப்பட இருக்கின்ற இந்நேரத்தில் நினைவுகூர்ந்து இப்பொதுக்குழு மத்திய அரசுக்கு சில கருத்துகளை முன்வைக்கிறது.

அடிப்படைகளை சிதைக்க எதிர்ப்பு

அடிப்படைகளை சிதைக்க எதிர்ப்பு

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது. இவற்றோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளை (Basic Structures) சிதைத்திட திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்பதை இந்தப் பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

சுயாட்சிக்கான பரிந்துரைகள்

சுயாட்சிக்கான பரிந்துரைகள்

அதே வேளையில் கடந்த 70 ஆண்டுகளாக நமது அனுபவத்தின் வாயிலாகப் பார்க்கிற போது மத்திய அரசு பல அதிகாரங்களை இன்று வரை மாநிலங்களிடமிருந்து எடுத்து தன்வசம் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் தலையாய கொள்கைகளில் மாநில சுயாட்சியும் ஒன்றாகும். மாநில சுயாட்சிக்காக கருணாநிதி, அமைத்த இராசமன்னார் குழுவில் தமிழ்நாடு அரசின் கருத்துரையாக" உண்மையான கூட்டாட்சி அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்; ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளதை இப்பொதுக் குழு மீண்டும் நினைவுகூர்கிறது.

மாநிலங்கள், மாவட்டங்கள் நீக்கம்?

மாநிலங்களுக்குத் தரப்பட்டிருக்கிற 18 அதிகாரங்களின் இன்றைய நிலையை திமுக மிகக் கவலையோடு பார்க்கிறது. மேலும் பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள் என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பா.ஜ.க அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு கழகம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியை கைவிட வேண்டுமென்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
DMK Genera Council has urged the Centre to drop the abolishing the existing states and districts which will convert in to 200 Janpaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X