"பூனைக்குட்டி" வந்தாச்சு.. ஜெ.மரண ரிப்போர்ட் பார்த்து அதிர்ந்த சசிகலா! "அவருக்கு" போன் போட்டாராமே.. ஓஹோ
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் நேற்று முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு விஷயம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது... ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக கூறப்பட்டது..
எனினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டவாறே இருந்தது.. குறிப்பாக, சசிகலா மீது சந்தேக ரேகைகள் அழுத்தமாகவே விழுந்தது.

அரியணை
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், இழுபறியாக விசாரணை நீடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குள் அதிமுக ஆட்சியும் முடிந்துவிட, திமுக அரியணை ஏறியது.. இதையடுத்து, சுமார் 5 வருடங்களுக்கு பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒப்படைத்தார்.

ராதாகிருஷ்ணன்
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்றைய தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலை வீச ஆரம்பித்துள்ளது.. குறிப்பாக, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்
2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை, ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றெல்லாம் ஆணையம் புட்டு புட்டு வைத்துள்ளது... எனவே, குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அபத்தம் - டாக்டர்
ஆனால், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் தலையிடவில்லை என்று சசிகலா மறுத்துள்ளார்.. என்மீது பழி போடுவது அபாண்டம்.. இப்படி ஒரு பொய்யான அபத்தமான ஒருகருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன. அதன் உள்நோக்கம் என்ன. ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதுபோல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு நான் மருத்துவப்படிப்பு படித்தது கிடையாது என்றெல்லாம் விளக்கம் கூறியுள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
எனினும் இந்த ஆணையம் அளித்துள்ள ரிப்போர்ட் எந்த அளவுக்கு அதிமுக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கை தனது கைக்கு கிடைத்த மாத்திரத்தில் அதனை முழுமையாக படித்து பார்த்தப் பிறகு, சசிகலா முதலில் ஃபோன் பண்ணியது பண்ருட்டி ராமச்சந்திரனுக்குத்தானாம்.. அவரிடம் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்..

பண்ருட்டியார்
அதற்கு பண்ருட்டியார், "அறிக்கையை நானும் பார்த்தேன். அதிமுக தொண்டர்களிடம் உங்கள் இமேஜை பலகீனப்படுத்துவதற்காகவே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமாக இருங்கள்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னாராம்.. ஏற்கனவே பாஜக கெடுபிடியால் ஒருவருடம் மேலாகவே ஒதுங்கியிருந்ததாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போதுதான் சசிகலா அரசியலில் தீவிரமெடுத்து வருகிறார். ஆனால், அதற்குள் இப்படி ஒரு சிக்கலா? என்று முணுமுணுக்கிறார்கள் தென்மண்டல அதிமுகவினர்..!!












Click it and Unblock the Notifications