பதற வைத்த "பாஜக ராம்குமார்".. ஸ்டாலினை சீண்டி.. "தோழரை" திட்டி.. மோடியை பாராட்டி.. டென்ஷன் அறிவாலயம்
சிவாஜி உயிருடன் இருந்திருந்தால், மோடியை பாராட்டியிருப்பார் என ராம்குமார் சொல்கிறார்
சென்னை: சிவாஜி இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகனும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராம்குமார் தெரிவித்துள்ளார்... இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
சினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று பரவலாக சொல்வது உண்டு... ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தின் பரிச்சயமும், ஃபேமஸ் ஆன முகமும் சிவாஜி கணேசன்!!
ஒரே ஒருநாள் திருப்பதி போய் வந்தார் சிவாஜி.. அவ்வளவுதான்... இந்நிகழ்வு பெரிய சலசலப்பை ஏற்படுத்த, 1961-ல் காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்டார் சிவாஜி.

நேரு - காமராஜர்
அளவுக்கு அதிகமாக நேருவையும், காமராஜரையும் விரும்பினார். பற்று வைத்த நேரு மறைந்ததும், காமராஜர்தான் தனக்கு அனைத்தும் என்றே இருந்தார்.. 1967ல் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் 2-ஆக பிரிந்தபோதும் சரி, காமராஜரை தவிர வேறு யாருக்குமே தன் மனதில் கொஞ்சம்கூட இடம் தரவில்லை... காமராஜரின் மறைவுக்குப் பின்தான் எல்லாமே மாறியது. கருத்து வேறுபாடு கொண்டு, காங்கிரசை விட்டு வெளியே, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்க.. 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் நின்று தோற்று போக... இப்படியே அவரது அரசியல் நகர்ந்தது.

சொத்துக்கள்
தனது கட்சிக்காக சொத்துக்களை அதிக அளவு இழந்தவர் சிவாஜி கணேசன் என்றுகூட அன்றைய காலகட்டங்களில் பேசப்பட்டது. சிவாஜி இருந்தபோதும் சரி, தற்போதும் சரி.. அவரது குடும்பத்து சார்பாக யாருமே எந்த கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டதில்லை... தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவானாலும் சரி, மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே அந்த குடும்பத்துக்கு ஒன்றுதான்.. ஒரே மாதிரிதான்.. இந்திய அரசியல், இந்திய சினிமா என்ற உலகில் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சிவாஜி குடும்பம் பலவருட காலத்துக்கு ஒன்றுபட்டே, ஒரே குடும்பமாகவே தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டது.

பாஜக - ராம்குமார்
ஆனால், இந்த நடைமுறையை முதன்முதலில் உடைத்தவர் அவரது மகன் ராம்குமார்.. திடுதிப்பென்று பாஜகவில் இணைந்துவிட்டார்.. ராம்குமாரின் இந்த முடிவு சிவாஜி ரசிகர்களிடையே அப்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததை மறுக்க முடியாது.. உயிர் பிரியும் வரை காங்கிரஸின் தொண்டனாக இருந்த ஒருவரின் மகன் இப்படி செய்யலாமா என்று ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டிருந்தனர்.. ஆனாலும், மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்ற கருத்தை பதிவுசெய்துவிட்டு, மறுநாளே கட்சியில் இணைந்தவர்தான் ராம்குமார்.

திடீர் அறிக்கை
கட்சியில் அன்று இணைந்ததோடு சரி, அதற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.. தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக ஈடுபடவில்லை.. போட்டியிடவில்லை.. பரபர கருத்தோ, பேட்டிகளோ இதுவரை அவ்வளவாக வந்ததில்லை.. இந்நிலையில் இவர் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு காரணம் இரா.முத்தரசன்தான்.. சமீபத்தில் முத்தரசன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், அவர் தான் வாங்கிய செவாலியர் விருதை மோடிக்கு வழங்கி இருப்பார்.. அந்த அளவுக்கு மோடி நடித்து வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். இதற்குதான் ராம்குமார் கொந்தளித்து அறிக்கை விட்டுள்ளார்.

இரா.முத்தரசன்
அந்த அறிக்கை இதுதான்: "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பிரதமர் மோடியை விமர்சிக்கும்போது, தேவையின்றி எங்களுடைய தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசனும் பிரதமர் மோடியும் இடைவிடாத மற்றும்அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன் எங்கள் தந்தை நட்புடன் இருந்தவர். நெருக்கடியான காலங்களில், அவர்களுக்கு உதவியவர் தனது உடல், பொருள், புகழ் ஆகியவற்றை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

கடின உழைப்பு
எதிர்பார்ப்பும் இல்லா மல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். நேர்மை, திறமை, கடின உழைப்பு காரணமாக, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பல விருதுகளும் கிடைத்தன. எனவே, அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிவாஜி இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை பிரதமர் கடைப்பிடித்து வருகிறார்.

பிரதமர் மோடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே பாணியைப் பின்பற்றி வெற்றி நடைபோடுகிறார். இடது, வலது என எந்தப் பக்கமும் திரும்பாமல், நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர்களின் பயணம் தொடர்கிறது. உங்களுடைய கருத்தில், இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த அறியாமை தெரிகிறது. பாஜக அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி, மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக அளித்த வாக்குறுதிதான் மக்களை கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்கள். 'Little knowledge is dangerous' என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.

சிவாஜி கணேசன்
அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பதை உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது. சிவாஜி கணேசனைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரைத் தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" என்று அறிக்கையில் ராம்குமார் தெரிவித்துள்ளார்... தன் தரப்பு விளக்கத்தையும், பதிலையும், கண்டனத்தையும் ராம்குமார் அறிக்கையாக பதிவு செய்துள்ளார். அதேசமயம், சிவாஜி இருந்திருந்தால், பாஜகவை ஆதரித்திருப்பார் என்று தெரிவித்துள்ளதுதான் பரவலாக பரபரப்பை காங்கிரசுக்குள் ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் ஆளும்கட்சியையும், தேவையில்லாமல் இழுத்து கொண்டு வந்து சீண்டி விட்டுள்ளது, திமுகவில் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications