தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும்.. சென்னையில் குளுகுளு கிளைமேட் இருக்கும்.. அதுவும் இடியுடன் மழை
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், இப்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் விட உச்சத்தில் இருந்த நிலையில், இந்த மழை சற்றே ஆறுதலாக உள்ளது.
இதற்கிடையே வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. மேலும், பிப்பர்ஜாய் புயலின் தற்போதைய நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புயல்: வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று (11.06.2023) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் "பிப்பர்ஜாய்" வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (12.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில், நிலை கொண்டுள்ளது.
இது மேலும் 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.2023 அன்று நண்பகல், மிகத் தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)- மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.

மழை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் (ஜூன் 12) நாளையும் (ஜூன் 13) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 14 முதல் 16 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றும் (ஜூன் 12) நாளையும் (ஜூன் 13) தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல வரும் நாட்களில் அரபிக்கடல் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பல இடங்களில் வலுவான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications