3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின் கட்டணம்.. தவெக டோட்டல் பெயிலியர்.. ஸ்டாலின் தாக்கு
சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டன. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, அறிவிக்காத சர்ச்சைகள் தான் அதிகம் உள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஆனால் மின் கட்டணத்தில் ஏராளமான குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை என்று 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலித்ததை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் சேவை இணைப்புகளுக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக ஐடி விங் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

அரசே ஒப்புக் கொள்ளும் நிலை
தவெக அரசே தன் நிர்வாகத்திறமையின்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாய பொருளாதாரச் சுமையை சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" என்று பிரபல யூடியூபர் சித்து மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவுடன் பதிவிடப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பதிவை ரீ-ஷேர் செய்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ரீடிங் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
