ஓபிஎஸ் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி வைக்க தயாராகும் இபிஎஸ்.. ப்ளான் கைகொடுக்குமா?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வத்தின் இணைப்புக்கு முற்றும் போட்ட கையோடு அவர் கால் வைக்கப்போகும் இடங்களில் எல்லாம் கண்ணி வெடி வைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா ராணுவக்கட்டுக்கோப்போடு கட்டிக்காத்த அதிமுகவிற்கு 50 வயதாகப் போகிறது. பொன்விழா காணப்போகும் கட்சியின் கொண்டாட்டத்திற்கு இந்த நேரத்தில் எத்தனையோ ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையேயான பிரச்சினையால் அதிமுக அலுவலகமே போர் நடந்து முடிந்த இடம் போல அமைதியாக காட்சி அளிக்கிறது.
கடந்த 35 ஆண்டுகளில் அதிமுக எத்தனையோ சிக்கல்களில் இருந்து மீண்டிருக்கிறது ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலில் இருந்து மீளுமா? தலைமைகளுக்கு இடையேயான பிரச்சினைகள் முடிந்து ஒற்றுமை ஏற்படுமா என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். கட்சியை முழுவதும் தன் வசமாக்கி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கருதினாலும் ஓ.பன்னீர் செல்வமும் தனது பக்கத்தில் இருந்து காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கன்னி வெடிகளை வைக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவின் உட்கட்சி பூசல்
எனக்குப் பிறகு 200 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று கடந்த 2016ஆம் ஆண்டு கம்பீரமாக சட்டசபையில் அறிவித்தார் ஜெயலலிதா. அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுக ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அதை ஆரம்பித்து வைத்தவர் சசிகலா. அவர் சிறைக்கு சென்ற பின்னர் நான்காண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்தாலும் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஒற்றைத்தலைமை
முதல்வர் வேட்பாளர், எதிர்கட்சித்தலைவர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக்கொடுத்தாலும் பொதுச்செயலாளர் என்ற பதவியை விட்டுத்தர ஓ.பன்னீர் செல்வம் தயாராக இல்லை. அதன் விளைவுதான் கடந்த 5 மாதங்களாக நடைபெறும் கலாட்டாக்களுக்கு காரணம். ஒற்றைத்தலைமை வேண்டும் அது தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

நீதிமன்ற படியேறிய ஓபிஎஸ்
பொதுக்குழு கூட்டம் தொடங்கி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது வரை பல விசயங்களுக்கு நீதிமன்ற படியேறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இதில் ஒருமுறை வெற்றி கிடைத்தாலும் பல முறை தோல்வியே கிடைத்துள்ளது. இது ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் சோர்வடையவே வைத்துள்ளது.

பூஸ்ட் கொடுத்த உச்சநீதிமன்றம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இது ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு உற்சாகத்தை அளித்தாலும் பொதுக்குழுவிற்கோ, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கோ எந்த வித தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை.

பதவிக்கு ஆபத்து இல்லை
நவம்பர் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாது என்பதே ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதலான விசயம்தான். அதே நேரத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு எந்த ஆபத்தும் தற்போதைக்கு இல்லை என்பதால் உற்சாகமாகவே வலம் வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தென் மாவட்டத்தில் உற்சாக அலை
இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பிறகு மதுரை, விருதுநகரில் சுற்றுப்பயணத்தை முடித்து பிரம்மாண்ட கூட்டத்தை காட்டி தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தனது அணியில் உள்ள ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்டு காய் நகர்த்தி வருகிறாராம். தேவர் குருபூஜையிலும் பங்கேற்று குறிப்பிட்ட சமூக மக்களிடமும் தனது செல்வாக்கையும் அதிமுகவின் வாக்கு வங்கியையும் தக்க வைக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

ஓபிஎஸ்க்கு எதிரான கண்ணி வெடிகள்
தனக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாக கவனித்து அதற்கு ஆங்காங்கே கண்ணி வெடிகளை வைக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆணையத்தை ஓ.பன்னீர் செல்வம் மலைபோல நம்பியிருந்தாலும் அதையும் தவிடுபொடியாக்க பல திட்டங்களை போட்டு வைத்திருக்கிறாராம்.

இபிஎஸ் + பிளான்கள்
எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வமோ மேற்கு மாவட்டங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம். மதுரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் யுத்தம் நடத்தினால் ஓ. பன்னீர் செல்வம் ஆனால் கொங்கு மண்டலத்தில் கால் வைக்கப்போகும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக தனது சமூக ஆதரவாளர்களை வைத்து மிகப்பெரிய திட்டங்களை போட்டு வைத்திருக்கிறாராம். அதற்கு முன்னோட்டமாகவே அக்டோபர் 10ஆம் தேதியன்று தனது பலத்தை நிரூபிக்க மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டப்போகிறாராம். எது எப்படியோ அதிமுகவில் தலைமைக்காக நடைபெறும் உட்கட்சி பூசல் சண்டை எதிர் கட்சிகளுக்குதான் கொண்டாட்டமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications