கவனிச்சீங்களா.. பிரதமர் மோடி ஸ்டைலில் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்த ஈபிஎஸ்.. வெளியான வீடியோ
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 72 நாளுக்கு பிறகு இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். இந்த வேளையில் அவர் பிரதமர் நரேந்திர மோடி பாணியில் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக இரட்டை தலைமையின் கீழ் பயணம் செய்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் இந்த ஆண்டில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. கடந்த ஜூன் மாதம் மத்தியில் இந்த விவகாரம் வெளிப்படையாக தெரியவந்தது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

அதிமுக பிரச்சனை
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து உள்கட்சி மோதல் வெடித்து நீதிமன்றங்களை நாட தொடங்கினர். இதற்கிடையே தான் ஜூலை 11 பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

72 நாளுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில்..
இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதபதி வழங்கிய தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாகவும், அதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் வந்தது. இதன்மூலம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். இந்நிலையில் பலகட்ட அரசியல் குழப்பம், நீதிமன்ற வழக்குகளை தாண்டி 72 நாட்களுக்குப் பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

படிக்கட்டை தொட்டு வணங்கிய ஈபிஎஸ்
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முன்பாக வாசலில் செருப்பை கழற்றி படிக்கட்டை தொட்டு வணங்கினார். இந்த வேளையில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க.. கட்சியின் பொதுச்செயலாளர் வாழ்க என தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து ஆரவாரம் செய்த தொண்டர்கள் சூழ அவர் கட்சியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மோடி பாணியில் எடப்பாடி பழனிச்சாமி
முன்னதாக நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நுழைந்தபோது நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டு வணங்கி உள்ளே நுழைந்தார். இந்நிலையில் தான் பலகட்ட சட்ட போராட்டத்தை கடந்து அதிமுக அலுவலகத்துக்குள் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முதல் முறையாக நுழைந்த எடப்பாடி பழனி்ச்சாமி, பிரதமர் நரேந்திர மோடி ஸ்டைலில் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications