கேட்டுச்சா.. ‛இடைக்கால’ இல்லை.. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரே இபிஎஸ் தான்!அழுத்திய மாஜி அமைச்சர்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என மாஜி அமைச்சர்கள் அழுத்தி கூறியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்தன. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் களேபரத்துடன் முடிவடைந்தது. இதில் தீர்மானங்கள் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் 11ல் நடந்த பொதுக்குவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் பங்கேற்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் தான் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வும் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு
அதேசமயத்தில் இந்த தீர்ப்பு என்பது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது அவர்கள் தங்களின் அடுத்தககட்ட நகர்வுகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். ஓ பன்னீர் செல்வம் தரப்பை பொறுத்தமட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

நிரந்தர பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்போ ஓ பன்னீர் செல்வத்துக்கு செக் வைக்கும் நிலையில் கருத்துகளை கூறி வருகின்றனர். அதாவது இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி விரைவில் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்டவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

செல்லூர் ராஜூ கூறியது என்ன?
இதுதொடர்பாக மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛இன்று நல்ல தீர்ப்பு வந்துள்ளது. அதிமுகவை பொறுத்தமட்டில் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிரந்தர பொதுச்செயலாளராக வரப்போகிற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இருக்கிறது''என தெரிவித்துள்ளார்.

தங்கமணி கூறியது என்ன?
இதுதொடர்பாக மாஜி அமைச்சர் தங்கமணி கூறுகையில், ‛‛ தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு எங்கு சென்றாலும், நியாயம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம். வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்''என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications