போட்டிக்கு நானும் வரலாமா? தவெகவில் இணையும் திண்டுக்கல் மாஜி திமுக தலை? பரபரப்பாகும் பூட்டு நகரம்!
சென்னை: தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழகத்தின் பிரபலமான அமைப்பான 24 மனை தெலுங்கு செட்டியார் செயல் சங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த சங்கத்தின் தலைவரும், திமுக பிரமுகரும், திண்டுக்கல் முன்னாள் சேர்மனுமான நடராஜன் தேர்தலில் போட்டியிட சொல்லப்படுகிறது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கலம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. மீண்டும் ஆட்சியை தொடர வேண்டுமென திமுகவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் முட்டி மோதி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் களமிறங்குகிறார்.
கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்திருக்கிறேன் எனக்கூறி அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு, பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். இது ஒரு புறம் இருக்க மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், பூத் கமிட்டி ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முழுக்க முழுக்க தயாராகி வருகிறது தமிழக வெற்றி கழகம்.

2026 சட்டமன்ற தேர்தல்
மேலும் நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர் பட்டியலும் மறைமுகமாக தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த கூட்டணியும் அறிவிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் விஜய் கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில் மூத்த அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள் விஜய் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
திண்டுக்கல் அரசியல்
மேலும் அரசியல் பிரபலங்களின் வாரிசுகளும் தமிழக வெற்றிக்கழகத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் பிரதான சாதி அமைப்புகளில் ஒன்றான 24 மனை தெலுங்கு செட்டியார் செயல் சங்கம் விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவர் திண்டுக்கல் ஆர்.நடராஜன் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் நடராஜன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் நடராஜன்
திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நகர்மன்ற தலைவராக இருந்தவர் நடராஜன். திண்டுக்கல் மாநகர் முழுவதும் அல்லாது மாவட்ட முழுவதுமே அவருக்கு செல்வாக்கு அதிகம். திமுகவிலிருந்து ஒதுங்கிய பின்னர் தனது அமைப்பின் மீது கவனம் செலுத்தி வந்தவர், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து வந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டமும் நடைபெற்ற நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
தவெக கூட்டணி
அதே நேரத்தில் அதிமுக தரப்பு நடராஜன் தரப்பையை தொடர்பு கொண்டு பேசியதாகவும் சென்னையில் சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த சங்கத்தின் ஆதரவை விஜய்க்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட அந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டதாகவே சொல்லப்படுகிறது. ஏற்கனவே அரசியலில் அனுபவம் கொண்ட நடராஜன் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் உலாவுகின்றன.
திண்டுக்கல் சீனிவாசன்
ஏற்கனவே திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக திமுகவின் அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஐபி செந்தில் குமார் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. திமுகவில் வேறு சிலரும் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் ஐபி செந்தில் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விஜய் கட்சியில் இணைந்து நடராஜன் போட்டியிடுவது திண்டுக்கல் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு வேலை இந்த மூவரும் தேர்தலை சந்தித்தால் நிச்சயம் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் திண்டுக்கல் அரசியல்வாதிகள். நடராஜன் திமுகவில் இருந்தவர் என்பதால் அது ஐபி செந்தில் குமாருக்கு நெருக்கடியாக அமையும். திண்டுக்கல் சீனிவாசனுக்கும் நிச்சயம் டஃப் கொடுப்பார் நடராஜன் என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications