வாய்ஸ் மட்டும் குடுங்க! 1996 திரும்புமா? ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு! விடாமல் நெருக்கும் திமுக -பாஜக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வேலைகளை திமுகவும் அதிமுகவும் மிக தீவிரமாக செய்து வருகின்றன. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என சிறிய கட்சிகளாக இருந்தாலும், தனி நபர்களாக இருந்தாலும் கூட ஆதரவை பெறும் முயற்சி தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் 1996இல் ஆட்சி மாற்றத்திற்கு காரணமான நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை பெற திமுகவும் பாஜகவும் காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை யாருக்கும் ரஜினிகாந்த் உறுதியான பதிலை அளிக்கவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு, மறைமுக வேட்பாளர் என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என அதிமுகவும் திமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். லெட்டர் பேடு கட்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை. 100 ஓட்டு இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம் என கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

2026 சட்டசபை தேர்தல்
தமிழக அரசியல் சூழலில் தற்போதைக்கு நான்கு முனை போட்டியை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில நூறு வாக்குகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூழல் உள்ளது. இதனால் சிறிய கட்சிகள் மட்டும் அல்லாமல், தனி நபர்களின் ஆதரவை பெரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களுடன் திமுகவும் அதிமுகவும் பேச்சு நடத்தி வருகிறது. இதில் சில பிரபலங்கள் அக்கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கலாம் எனவும், சிலர் பிரச்சாரத்துக்கு கூட வரலாம் என சொல்லப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்-ன் ஆதரவை பெற அரசியல் தரப்புகளில் அமைதியான முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு தரப்பும் தனித்தனியாக அணுகி வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், அவர் உருவாக்கிய ரசிகர் மன்றங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. 2018ஆம் ஆண்டு அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியபோது மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அரசியல் ஆதரவு
அந்த அமைப்பில் செயல்படும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும், தேர்தல் சூழலில் இந்த ஆதரவு அரசியல் கணக்கில் முக்கியமாக கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை முன்னிட்டு திமுக தரப்பில் முதற்கட்ட தொடர்பு முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. திமுக மேலிடத்துடன் தொடர்புடைய ஒரு தயாரிப்பாளர் மூலம் ரஜினிகாந்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
திமுக பேச்சு
அந்தப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேரன் இன்பநிதியின் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தொடர்புகளின் போதே, தேர்தலில் திமுகக்கு ஆதரவு குரல் அளிக்குமாறு ரஜினிகாந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 1996ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மு. கருணாநிதி தலைமையிலான அணிக்கு அவர் வழங்கிய ஆதரவு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்ற நினைவூட்டலும் இடம்பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜக ஆதரவு
அப்போது போல வெளிப்படையான அரசியல் அறிக்கை தேவையில்லை; குறைந்தது அமைப்பு நிர்வாகிகளுக்கு வழிகாட்டல் அளிக்கலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ரஜினிகாந்த் இதுவரை எந்த உறுதியான பதிலும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ஆன்மிக மனப்பான்மையுடன் இருக்கும் ரஜினிகாந்தை அணுக பாஜக தரப்பும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
1996 தேர்தல் தாக்கம்
முன்பு அவரது அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்போது பாஜகவில் இருப்பது இந்த முயற்சிக்கு ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அவரது வழியாக தொடர்பு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் ஆதரவு தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அரசியல் மதிப்பீடு காரணமாக இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன. 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகி திமுக கூட்டணியில் இணைந்து பெற்ற வெற்றிக்கும் ரஜினிகாந்தின் ஆதரவு ஒரு காரணமாக கூறப்பட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேசப்படுகிறது. மொத்தத்தில், ரஜினிகாந்த் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், அவரது ஆதரவை பெற பல தரப்புகள் ஆர்வமாக உள்ளன. ஆனால், அவர் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பது தான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications