மின் கட்டணம் பில்லிங் சிஸ்டம்.. ரீடிங் எடுக்க ஆள் இல்லை? அக்டோபரில் தனியாரிடம் போகும் மின் கணக்கீடு
சென்னை: மின் கட்டணம் வருவதிலேயே தாமதம்.. அந்த பில் தொகையிலும் திடீர் மாற்றம்.. என்று சில சிக்கல்கள் தலைதூக்கியபடி உள்ளன.. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதால்தான் இப்படியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனினும் இந்த சிக்கலுக்கு தற்காலிகமாக ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த மாசம் கரண்ட் பில் எவ்வளவு வரப்போகுதோ? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கும் வழக்கமான விஷயம். ஆனால், ரீடிங் எடுப்பவர்கள் அதாவது மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் வழக்கமான கணக்கீட்டுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கரண்ட் பில் குளறுபடிகள்
சில இடங்களில் கணக்கீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், இதனால் திடீரென அதிகமான மின் கட்டணம் வந்ததாகவும் நுகர்வோர் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மின் கணக்கீட்டாளர் பணியிடங்களின் பற்றாக்குறையாகம்.. ஏற்கனவே உள்ள பணியாளர்களை வைத்து, அனைத்து பகுதிகளிலும் கணக்கீட்டுப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது... இதனால் வழக்கமான மின் கட்டண கணக்கீட்டு சுழற்சியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியம்
பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வுபெற்ற பணியாளர்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர். அதேபோல், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை வழங்கப்பட்டு வந்துள்ளது. இப்படியெல்லாம் சமாளித்து வந்தாலும் ரீடிங் பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை.. தொடர்ந்து சரியான கால அட்டவணையிலும் மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில்தான், இதற்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு தகுதி வாய்ந்த தனியார் ஏஜென்சிகளை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து மின் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ள செய்யப்பட உள்ளனர்.
ரீடிங் லேட் - தனியார் வசம்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் இந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கணக்கீட்டுப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்காலிகமான தீர்வு என்றாலும், இப்படியொரு சூழலில், மின் கணக்கீட்டுப் பணியையே தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரந்தர ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.
மறுபுறம், மின் கணக்கீடு தாமதமில்லாமல் நடைபெற வேண்டும் என்பதுதான் நுகர்வோரின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனினும், இந்த தற்காலிக தனியார் ஒப்பந்த ஏற்பாடு, இப்போதுள்ள பிரச்சனைக்கு எந்த அளவுக்கு தீர்வு தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!


Click it and Unblock the Notifications
