மேற்கு மாம்பலம் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு.. திங்கள்கிழமை இருக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் கெடு
சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை திங்கட்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க வைணவத் தலமாக போற்றப்படுகிறது.இந்தகோயிலுக்கு ராமானுஜர் வந்து சென்றுள்ளதால், அவருக்கு 'பாஷ்யகாரர்' என்ற பெயர் சிறப்பளிக்கும் வகையில் ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ஜனார்த்தனன் என்பவர் கடந்த 2025ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு 2025-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்கள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்க உள்ளதாக , இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை ஆணையர் சார்பில், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், "வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தி விட்டனர். அதனால், நிலத்தை அவர்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க உள்ளோம்" என்று கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓராண்டுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. முன்பு அன்னதான கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்போவதாக தெரிவித்த அறநிலையத்துறை, தற்போது ஆக்கிரமிப்பாளர்களை தொடர அனுமதிக்க இருப்பதாக கூறியுள்ளது. 25 லட்சத்து 29 ஆயிரத்து 907 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.
இதில், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மட்டும், அதாவது வெறும் 7 சதவீத தொகையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மீண்டும் வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் ஆகும். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 7-ந்தேதிக்குள் (திங்கட்கிழமைக்குள்) அறநிலையத்துறை ஆணையர் அகற்றவேண்டும். அதுகுறித்து 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மேலும், புராதன சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலுக்குள், அன்னதான கூடம் கட்டுவது ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணானது" என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற செப்டம்பர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இதன் காரணமாக ஆக்கிமிப்புகள் அகற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
