“இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் காப்பாற்றியது தவெக அரசு” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
சென்னை: ஜெம் வீரமணியைப் பாதுகாக்கும் ஆட்சி தவெக ஆட்சி, இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்திக் காப்பாற்றியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், "போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியைப் பார்த்து குடும்ப நண்பர் என்கிறார் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன். வீரமணியைப் பாதுகாக்கும் ஆட்சி தவெக ஆட்சி
என்ற உண்மை வெளியே வந்துவிட்டது.

இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்திக் காப்பாறியது. இந்த வழக்கில் பல முறை வாய்தா கொடுக்கப்பட்டு விட்டது. மீண்டும் மீண்டும் கேட்பதா என நீதிபதி கண்டித்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். தன் உத்தரவின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியது அப்பட்டமான பொய். திமுக ஆட்சியில் இருந்தபோதே ஜெம் வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தேர்தல் பிரசாரத்தில் தவறான கருத்தை கூறியுள்ளார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணிக்கு தவெக அரசு உடந்தையாக உள்ளது. வீரமணியின் விழாவில் தவெக அமைச்சர்கள் பங்கேற்றனர். முதல்வர் விஜய் சினிமாவில்தான் நடித்தார் என்றால் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதலமைச்சர் விஜய்? தவெக ஆட்சியில் 4 மாதங்களில் 300க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 250 கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனர்" எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
