மோடியே எதிர்பார்த்தார்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கோர்ட் வைத்த குட்டு... பின்னணியை உடைத்த புள்ளி!
சென்னை: பேரறிவாளன் விடுதலையில், பின்னர் 6 பேர் விடுதலையில் ஏற்கனவே ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தது. தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆளுநர் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு பட்டுக்கொண்டே இருக்கிறார்., என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.

தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.
இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டனங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் மட்டுமே, மீண்டும் திருப்பி அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார். நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பேட்டி: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பேரறிவாளன் விடுதலையில், பின்னர் 6 பேர் விடுதலையில் ஏற்கனவே ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தது. தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆளுநர் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு பட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் இந்த மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த 10 மசோதாக்கள் பண மசோதாக்கள் போல் மாறிவிட்டன. அதனால் ஆளுநர் ரவிக்கு வேறு வழியே இல்லை.
ஆளுநருக்கு எதிரான மற்ற மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதையும் அறிவிக்காது. வெறுமனே கருத்துக்களை தெரிவிக்கும் . கருத்துக்களை தெரிவித்து மசோதாக்களை முடித்து வைக்கும். மத்திய அரசின் அதிகாரம் காரணமாக ஆளுநர்கள் ஆடுகிறார்கள். மத்திய அரசின் கங்காணிகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். 2024ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இது சரியாகும். அப்போது மட்டுமே பிரச்சனை ஒழியும். அதுவரை பிரச்சனை முடியாது.
அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் ரவி தவறாக கையாள கூடாது. மோடி அரசு இருக்கும் வரை அதை இவர் மீறத்தான் செய்வார். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் மிக சிறந்த சட்டம். ஆனால் அதை மோசமாக பயன்படுத்தும் நபர்களாக இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். மோடி போல பிரதமர், ஆளுநர் ரவி போல நபர்கள் வருவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதனால் அரசியலமைப்பிற்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
என்ன சொன்னார்?: ஆளுநரை நியமிப்பதில் மாநில அரசின் ஒப்புதலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளது. ஆனால் அதை மத்தியில் இருக்கும் எந்த அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் அந்த அதிகாரத்தை விரும்புகிறார்கள். மோடியே மாநில முதல்வராக ஆளுநர்களை எதிர்த்தார். ஆனால் இப்போது அவரே ஆளுநர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications