ஜேஇஇ பெயில்.. பாஸ்போர்ட் இல்லை.. இந்திய தேர்வு முறையையே சீரமைக்க போகும் யார் இந்த காமகோடி
சென்னை: மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமாகோடி ஒன்றும் வழக்கமான ஐஐடி பட்டதாரி அல்ல. பாஸ்போர்ட் கிடையாது, ஜே.இ.இ (JEE) தேர்வில் தோல்வி... ஆனால், அவர்தான் இப்போது தேசியத் தேர்வு முகமையை (NTA) சீரமைக்கத் தயாராகி வருகிறார். இவரை கோமிய நிபுணர் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாட்டிலுள்ள 215 கல்வியாளர்கள் கடிதம் எழுதி உள்ளார்கள்.
நாடாளுமன்றத்தில் கடந்த 29ம் தேதி 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா- 2026' மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசும்போது, "வினாத்தாள் கசிவு தொடர்பான பிற குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பதுதான் மசோதாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. வினாத்தாள் கசிவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள புதிய நிபுணர்கள் குழுவில் பல உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடி தனது ஆலோசகர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தப் புதிய நிபுணர்கள் குழுவில் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் (தபன் தேகா), ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர் (நந்தன் நிலேகனி), ஒரு 'மாட்டுக் கோமிய நிபுணர்' (காமகோடி) ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். பிரியங்கா காந்தி, சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவன இயக்குநர் காமகோடியைத்தான் 'கோமிய நிபுணர்' என்று தனது பேச்சில் கூறியதை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கிறார்கள். 215 கல்வியாளர்கள் பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்கள்.
அந்த கடிதத்தில் பேராசிரியர் காமகோடி இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தலைவராக உள்ளார். ஒவ்வொரு கல்வியாளரைப் போலவே, கருத்துக்களை முன்வைக்கவும், பாரம்பரிய அறிவைப் பற்றி விவாதிக்கவும், அறிவியல் உரையாடல்களில் பங்கேற்கவும் அவருக்கு உரிமை இருக்கிறது. ஓர் அறிஞரின் கருத்துகளின் சாராம்சத்துடன் விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அவரை ஒரு முத்திரையின் மூலம் நிராகரிப்பது கூடாது. காமகோடியை கோமிய நிபுணர் என்று தெரிவித்து வெளியிட்ட கருத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஏபி இருங்கோவேல் என்பவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவினை காமகோடியின் ஆதரவாளர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள். அந்த பதிவில் அவர் கூறுகையில், "பேராசிரியர் காமகோடி மற்றும் அவரது தந்தை பேராசிரியர் வீழிநாதன் இருவருக்குமே நான் நன்கு அறிமுகமானவன். காமகோடி பற்றி எனக்கு வந்த ஒரு கருத்தைப் பகிர்கிறேன்.
பாராளுமன்றத்தில் பிரியங்கா வாத்ரா காமகோடி குறித்து கூறிய "கோமூத்ரா" கருத்தைப் பற்றிய என் பதிவுக்குக் கிடைத்த பதில் இது. 1980-ஆம் ஆண்டு கோடைக்காலம். மயிலாப்பூரில் உள்ள ஒரு எளிய வீட்டின் முற்றத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மனவேதனையுடன் நின்று கொண்டிருந்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து (Fast Bouncer) அவன் அணிந்திருந்த கண்ணாடியை உடைத்துவிட்டது. அதனால் அவனது பார்வைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்த அவனது தந்தை, புகழ்பெற்ற சமஸ்கிருத தர்க்கவியலாளர், அந்தச் சிறுவனின் கிரிக்கெட் மட்டையை ஆழமான கிணற்றுக்குள் எறிந்தார்.
"உன் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிந்தது," என்று கூறிவிட்டு, ஒரு வயலினை அவன் கையில் கொடுத்தார். "துல்லியத்தை (Precision) கற்றுக்கொள்ள விரும்பினால், இதில்தான் தேர்ச்சி பெறு." அந்தச் சிறுவன் கோபப்படவில்லை. தனது முழு கவனத்தையும் வயலின் இசையில் செலுத்தினான். கடுமையாகப் பயிற்சி பெற்று, பின்னர் இசை உலகின் ஜாம்பவான்களுடன் மேடையேறி வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தான். பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களிடமிருந்தே நேரடியாக ஆலோசனைகளையும் திருத்தங்களையும் பெற்றான்.
ஐந்து ஆண்டுகள் கழித்து, அவனுக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. IIT-JEE தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அவன் மனம் தளரவில்லை. ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். கணினி அறிவியலின் அடிப்படை தர்க்க அமைப்புகளை (Logic Gates) ஆழமாகக் கற்றான். பின்னர் முதுநிலை ஆராய்ச்சியாளராக IIT மதராசில் சேர்ந்தான். முனைவர் பட்டம் (PhD) பெற்றான். அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி, இறுதியில் ஒருகாலத்தில் தன்னை நிராகரித்த அதே நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தான்.
2011-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் நுகர்வோர் பயன்பாட்டு மொபைல் செயலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தப் பேராசிரியர் இந்தியாவின் ஒரு மறைந்திருந்த தேசியப் பாதுகாப்பு பலவீனத்தைப் பற்றி சிந்தித்தார்.இந்தியாவின் ரேடார்கள், போர் விமானங்கள், வங்கிச் சேவையகங்கள் , பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைச் சார்ந்திருந்தன.
அவரது மனதில் ஒரே ஒரு கேள்வி:
"ஒரு வெளிநாட்டு சிப்பை (Chip) நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறதா என்று சோதிக்க முடியும். ஆனால், போர்காலத்தில் அது நாம் விரும்பாத வேறு ஏதாவது செயலைச் செய்யாது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?"
இதற்குத் தீர்வாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, தொழில்துறை தரமான (Industrial Grade) ஒரு மைக்ரோபிராசஸரை அடிப்படையிலிருந்து உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், "பல பில்லியன் டாலர் முதலீடும், மிகப்பெரிய கட்டமைப்பும், ஏராளமான வெளிநாட்டு காப்புரிமைகளும் இல்லாமல் இது சாத்தியமில்லை" என்று கூறின. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. சிறிய ஆய்வகங்களில், நீண்ட நேர உழைப்புடன், தனது குழுவுடன் இணைந்து Open Source RISC-V Instruction Set-ஐ பயன்படுத்தினார். ஒவ்வொரு Logic Gate-ஐயும் கைமுறையாக வடிவமைத்து, Silicon Layout-களை உருவாக்கி, கோடிக்கணக்கான Instruction Cycle-களைச் சோதித்து உறுதிப்படுத்தினர்.
2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், "Risecreek" என்ற குறியீட்டுப் பெயருடைய வெறும் 16 சதுர மில்லிமீட்டர் அளவுள்ள சிலிக்கான் சிப் ஆய்வகத்திற்குத் திரும்பி வந்தது. அந்தச் சிப்பை இணைத்து மின்சாரத்தை இயக்கியபோது, திரையில் மெல்ல மின்னியபடி Linux Operating System, வரலாற்றில் முதல் முறையாக 100% இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சிலிக்கானில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.
இன்று, அவரது SHAKTI Processor Architecture, பாதுகாப்புத் தகவல் தொடர்பு அமைப்புகள் முதல், ISRO உடன் இணைந்து உருவாக்கப்பட்ட விண்வெளித் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு காலத்தில், தந்தை கிரிக்கெட் மட்டையை கிணற்றுக்குள் எறிந்த அந்தச் சிறுவன்... 1985-இல் IIT-JEE தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவன்... IIT இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறாமல், தனது மறைந்த தந்தையின் அரிய சமஸ்கிருத நூலகத்தைப் பாதுகாக்க குடும்ப வீட்டிலேயே வாழத் தேர்ந்தெடுத்த அந்த வயலின் கலைஞர்... அவர்தான் பேராசிரியர் வீழிநாதன் காமகோடி" இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
