அதிமுகவை அழிக்க பொய் வழக்கு... ஹிட்லரின் மறு உருவம் ஸ்டாலின் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஹிட்லர், முசோலினியின் மறு உருவம் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜெயக்குமாருக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து , அவர் இன்று காலை 6 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஜெயக்குமார் விடுதலை
ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் மாலைகளை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட 25 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு புழல் சிறையில் இருந்து விடுதலையானார் ஜெயக்குமார். வெளியே வந்த அவர் திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

பொய் வழக்கு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு என்று குற்றம் சாட்டினார். கள்ள ஓட்டு போட முயன்று திமுகவினரை தடுத்து நிறுத்தியதால் தான் நான் கைது செய்யப்பட்டேன் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள் புகார்
சமூக விரோதிகள் வாக்குச் சாவடியை கைப்பற்ற முயற்சித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே இதில் கவனம் செலுத்தினர் என்றார். தவறு செய்பவர்களை சிறைக்கு அனுப்பவேண்டும் என்று நான் கூறினேன். கள்ள ஓட்டு போட்டவர்களை சிறைக்கு தள்ளியது தவறா என்று கேள்வி எழுப்பினார்.

ஹிட்லர் முசோலினி மறு உருவம்
ஹிட்லரின் மறு உருவம் போல் முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுகிறார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று கூறினார் ஜெயக்குமார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் . ஹைகோர்ட் உத்தரவின்படி திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திடுவார்.












Click it and Unblock the Notifications