Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Flashback 2022: ஜெயலலிதா மரண மர்ம முடிச்சுகள்..2022ல் அதிர வைத்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ஆம் ஆண்டில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டு காலமாக விடை தெரியாத புதிராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் இருந்த மர்மம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கை வெளியான பின்னர் சசிகலா மீதான தியாக தலைவி என்ற பிம்மம் உடைந்தது. சசிகலா மட்டுமல்லாது டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றிய சமையலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி சாட்சியம் பதிவுசெய்தது. இதேபோல், அப்போலோ மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 151 சாட்சிகள் மற்றும் பிரமாணப் பத்திரம் அளித்த எட்டுப் பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

சசிகலா

சசிகலா

சசிகலா நேரில் ஆஜராகாமல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். சமீபத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, சட்டசபையில் ஆணையத்தின் 608 பக்க அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவமனை

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா அளித்த சாட்சியத்தின்படி சசிகலா, ஜெயலலிதா இடையே நல்லுறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சசிகலா உறவினர்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தவிர, அப்போலோ மருத்துவமனையால் வேறு ஆதாரங்களோ, ஆவணங்களோ வைக்கப்படவில்லை.

டிசம்பர் 4ல் நிகழ்ந்த மரணம்

டிசம்பர் 4ல் நிகழ்ந்த மரணம்

ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது டிசம்பர் 5ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது; ஆனால் டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஜெயலலிதாவின் மரணத்தை திட்டமிட்டே தாமதமாக அறிவித்திருக்கின்றனர் என்கிறது இந்த ஆணைய அறிக்கை. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மெல்ல கொல்லும் விஷம்

மெல்ல கொல்லும் விஷம்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமானது, ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்திருக்கிறது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் 443ஆம் பக்கம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் போயஸ் கார்டன் வீட்டில் அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று மனோஜ் பாண்டியன் கூறியிருந்தார். இது ஒரு வெறும் அனுமானமே தவிர, ஆதாரம் ஏதும் இல்லை. எந்தவொரு ஆதாரங்களும் ஆவணமாக அளிக்கப்படவில்லை.

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும், பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தும், அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டிருக்கும் என்று எந்த பிரேத பரிசோதனை அறிக்கையோ, மருத்துவரோ கருத்து தெரிவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லாததால் தவறானது; ஆதாரமற்றது என நிராகரிக்கப்படுகிறது என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நால்வர் மீதும் விசாரணை

நால்வர் மீதும் விசாரணை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர, ஆணையம் வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்து நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளடக்கியதாக இருந்தது அறிக்கை.

வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும். அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.

அதிர்வை ஏற்படுத்தாத ஆணைய அறிக்கை

அதிர்வை ஏற்படுத்தாத ஆணைய அறிக்கை

விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அன்றைய தினமே அறிக்கை வெளியிட்ட சசிகலா, "நம் இதயதெய்வம் அம்மா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என்மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என்மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தைப் பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என்மீது இந்தப் பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்குச் சாதித்திருக்க முடியாது. ஆனால் அதேசமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று உருகி உருகி அறிக்கை வெளியிட்டார்.

600 பக்க அறிக்கை

600 பக்க அறிக்கை

எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மரணத்தில் சர்ச்சை

மரணத்தில் சர்ச்சை

ஜெயலலிதாவுக்கு மட்டும் முறையாக சிகிச்சைகள் வழங்கியிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருப்பது அண்ணா திமுக தொண்டர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வருவேன் என கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். அதுமட்டுமல்ல தேர்தல் வாக்குறுதியாகவும் இதனைத் தெரிவித்திருந்தார். சொல்லும் செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கும் ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை அரசு சார்பில் செய்து கொடுத்தார்.

சட்டப்படி எதிர்கொள்ளும் சி.விஜயபாஸ்கர்

சட்டப்படி எதிர்கொள்ளும் சி.விஜயபாஸ்கர்

தன் மீதான ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டு பற்றி முக்கிய வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வரும் சசிகலா, என்ன பதிலளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் சி.விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தை அடுத்து எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் வெளியிட்டுள்ள கருத்துக்கள், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னதைப் போலவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறையின் மாஜி அமைச்சர் சி.விஐயபாஸ்கர். மேலும் மடியில் கனமில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டில் சிறிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+