ஆன்லைன் ஆவணப்பதிவில் நான்கு குளறுபடிகள்.. பட்டியல் போட்ட பத்திரப்பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைப்பிரிவு ஆவணங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரிக்கப்படாத பங்கு விற்பனை செய்யப்படும் ஆவணங்களிலும் பொதுவாக தாய் ஆவணம் ஒப்படைக்கப்படுவதில்லை. ஆனால், தற்போதைய ஆன்லைன் பதிவில் தாய் ஆவணம் ஒப்படைக்கப்படும் என்று இயல்ப நிலையாகவே வாசகம் இடம்பெறுகிறது. அந்த வாசகத்தை ஆவணத்தில் கையால் மாற்றுவதற்கும் வழியில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இதுபோன்ற ஆன்லைன் ஆவணப்பதிவில் குளறுபடிகளை களைய வேண்டும் என்று ஓய்வுபெற்ற பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர் ஆறுமுக நயினார் பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர் ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை, காத்திருக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலகம் வரத் தேவையில்லாத ஆவணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிகிறது.

Flaws in Online Document Registration Former Registration Department Additional Director Lists Issues

முதலாவதாக, அலுவலகத்துக்கு நேரில் வந்து செய்யப்படும் பதிவுக்கும், அலுவலகத்துக்கு வராமல் ஆன்லைன் மூலம் செய்யப்படும் பதிவுக்கும் ஒரே தகவல் தொடர்பு வழித்தடமே பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் ஒரு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, அலுவலகப் பதிவை நிறுத்திவிட்டு ஆன்லைன் பதிவை அனுமதித்தால், அலுவலகத்தில் நடைபெறும் பதிவு முழுமையாகத் தடைபடுகிறது. அதேபோல், அலுவலகப் பதிவை தொடர்ந்து நடத்தி, ஆன்லைன் பதிவை நிறுத்தினால் ஆன்லைன் பதிவுகள் அனைத்தும் தடைபடுகின்றன.

இரண்டாவதாக, மனைப்பிரிவுகளில் நடைபெறும் முதல் விற்பனை ஆவணங்கள் அலுவலகத்துக்கு வராமல் ஆன்லைன் முறையிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஆவணங்களைத் தயாரிக்கும்போது, பதிவுக்கு பிறகு அசல் ஆவணம் வாங்குபவரிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாசகம் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் தானாகவே இடம்பெறுகிறது. பொதுவாக மனைப்பிரிவு அமைத்து மனைகளை விற்பனை செய்பவர்களால் அசல் தாய் ஆவணத்தை ஒவ்வொரு வாங்குபவரிடமும் ஒப்படைக்க முடியாது. ஏனெனில் ஒரே மனைப்பிரிவில் பலர் மனைகளை வாங்குவார்கள். ஆனால், அந்த மனைப்பிரிவுக்கு ஒரு அசல் தாய் ஆவணம் மட்டுமே இருக்கும். எனவே, அந்த அசல் ஆவணத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், மனைப்பிரிவு ஆவணங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரிக்கப்படாத பங்கு விற்பனை செய்யப்படும் ஆவணங்களிலும் பொதுவாக தாய் ஆவணம் ஒப்படைக்கப்படுவதில்லை. ஆனால், தற்போதைய ஆன்லைன் பதிவில் தாய் ஆவணம் ஒப்படைக்கப்படும் என்று இயல்ப நிலையாகவே வாசகம் இடம்பெறுகிறது. அந்த வாசகத்தை ஆவணத்தில் கையால் மாற்றுவதற்கும் வழியில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

மூன்றாவதாக, வங்கிகளில் ஆவணங்களை அடமானம் வைத்து கடன் பெறுவதற்காக பதிவு செய்யப்படும் ஆவணங்கள், 'வங்கி வைப்பீடு' அல்லது 'எம்.ஓ.டி.' என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய வரும்போது, பல வங்கிகளின் பெயர்கள் ஆன்லைன் பட்டியலில் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகளில் அடமான ஆவணத்தைப் பதிவு செய்ய முயன்றால், அதை பத்திரப்பதிவுத்துறை இணையதளம் ஏற்றுக்கொள்வதில்லை. பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 'மற்றவை' என்ற பிரிவில் வங்கியின் பெயரைப் பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கும். ஆனால், தற்போது அந்த வசதி இல்லை. எனவே, 'மற்றவை' என்ற தேர்வை வழங்குவது கட்டாயமாகும்.

நான்காவதாக, போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாததால், அலுவலகத்துக்கு வராமல் செய்யப்படும் ஆவணப் பதிவுகளுக்கான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது பல்வேறு தவறுகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற தவறுகளைத் திருத்துவதற்கும், தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த குளறுபடிகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, அலுவலகத்துக்கு வராமல் செய்யப்படும் ஆவணப் பதிவு நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+