சென்னையில் கொட்டிய கனமழை..தேங்கிய வெள்ளநீர்..2 சுரங்கப்பாதைகள் மூடல்..போக்குவரத்து மாற்றம்
சென்னை: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூரபட்டு விநாயகபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இன்று காலையிலும் 5 மணியளவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில இடங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது.

குண்டும் குழியுமான சாலைகள்
சென்னை மாநகர சாலைகள் ஏற்கனவே மழையால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தேங்கிய மழைநீரில் சில இடங்களில் பெரிய பள்ளங்கள் இருந்தன. இதில் மோட்டார் சைக்கிகள் சிக்கிக்கொண்டன. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் தவறி விழுந்தனர்.

சுரங்கப்பாதைகள்
சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் கத்திவாக்கம், கொங்குரெட்டி, துரைசாமி சுரங்க பாதைகளில் தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இதனால் அந்த சுரங்க பாதைகளில் வாகன போக்குவரத்து தடை படவில்லை. எப்போதும் போல அனைத்து வானங்களும் சென்றன.

2 சுரங்கப்பாதைகள் மூடல்
கனமழையால் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூரபட்டு விநாயகபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் வடிந்திருந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் மழைநீர் வடிந்த இடங்களில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை
செங்குன்றம், புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், டாணா தெரு, ஓட்டேரி, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் எப்போதும் போல சாலையில் மழைநீர் தேங்கியது.

மிதக்கும் வட சென்னை
பட்டாளம், வியாசர்பாடி, கன்னிகாபுரம், புளியந்தோப்பு, ஸ்பென்சர் சாலை, சூளை உள்பட வட சென்னையின் பல இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர் பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வியாசர்பாடி ஜீவா சுரங்கபாதை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

வெள்ளநீரால் சிரமம்
அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி நகர், திருவள்ளுவர் நகர், நம்மாழ்வார் பேட்டை மார்க்கெட், ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பு வடக்கு காலனி, வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், சீனிவாசன் நகர் வடக்கு ஜெகநாதர் நகர், ரெட்டி தெரு, வில்லிவாக்கம் மார்க்கெட், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பட்டரவாக்கம் பால் பண்ணை சாலை, மேனாம்பேடு கருக்கு, டி.டி.பி.காலனி, கள்ளிக்குப்பம் காந்திநகர், அத்திப்பட்டு அயப்பாக்கம் சாலை, அம்பத்தூர் அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் கொந்தளிப்பு
திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று இரவு திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியில் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்தது. இதனால் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கீழே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications