சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மறைந்த கருணாநிதிக்கும், அவரது மகன் ஸ்டாலினுக்கும் இரண்டு மாறுபட்ட கருத்து உள்ளது. முரண்பாடு உள்ள நிலையில் நாங்கள் எப்படி கலந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் நேற்று நடந்தது. இதில் அதிமுக சார்பில் யாரும் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதேபோல் மருத்துவ பணியிடங்களில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முன் வந்தது திமுகவின் சமூக நீதி சட்டப்போராட்டத்திற்கு வெற்றி என முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கூறிவரும் வேளையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 Former Minister Jayakumar poses many questions to CM MK Stalin

சென்னையில் தீரன் சின்னமலை பிறந்த நாளுக்கு மாலை அணிவித்தபின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

இடஒதுக்கீட்டிற்கு நாங்கள் தான் காரணம் என்று அதிமுகவும் சொல்கிறது. திமுகவும் சொல்கிறது. உண்மையில் இதற்கு யார்தான் காரணம்?

உண்மையாக அதற்கு காரணம் நாங்கள்தான். வரலாற்றில் இட ஒதுக்கீடு என்று எடுத்துக்கொண்டாலே அது எங்களால் தான் நடந்தது. அதிமுகதான் காரணம். நான் கேட்கும் 5 கேள்விகளுக்கு திமுக பதில் சொல்லவேண்டும். 1980 ஆம் ஆண்டு 30 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை 50 சதவீதமாக ஒதுக்கியது யார்? திமுகவா? அன்றைய முதல்வர் எம்ஜிஆரும், அதிமுக ஆட்சியும் தான்.

அதன் பிறகு 1990 களில் மண்டல் கமிஷன் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை வழங்கியபோது அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று சொன்னது ஜெயலலிதாவின் அரசு. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அன்றைக்கு அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதிமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டும் அதேபோல 2020 ஆம் ஆண்டும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது எந்த ஆட்சி. அதிமுக ஆட்சி.

எடப்பாடி முதல்வராக இருந்தப்போது அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதேபோல வழக்கையும் அதிமுக தான் தொடுத்தது. அதிமுக சார்பில் அப்போதைய சட்ட அமைச்சர் வழக்குத் தொடுத்தார்.அந்த வழக்குத் தொடுத்த பின்புதான் மற்ற கட்சிகளும் அந்த வழக்கில் தங்களை இணைத்துகொண்டது

முதலில் அவர்கள் யாரும் வழக்குப் போடவில்லை. நாங்கள் வழக்குத் போட்டப்பிறகுதான் அவர்கள் வந்து இணைந்து கொண்டார்கள். அதன்பிறகு உயர்நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவில் மாநில அரசின் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் தலைமையிலான குழு அறிக்கையை அளித்தது. எங்களைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. சமூக நீதி என்றால் அது அதிமுகதான்.

69 சதவீத இடஒதுக்கீட்டை 9 வது அட்டவணையில் சேர்ந்த கட்சி அதிமுக. இதற்குக் காரணம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இட ஒதுக்கீட்டில் இவ்வளவு பெரிய வரலாறு உள்ளது. இதில் திமுக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையிலே நாங்கள் கொண்டுவந்த 27 சதவீதம் மற்றும் 69 சதவீதத்தைச் சொந்தம் கொண்டாடுவது எப்படி.

மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுவதில் புத்திசாலிகள் திமுகவினர். வரலாறு நிச்சயம் மக்களுக்குத் தெரியும். இட ஒதுக்கீட்டை அவர்கள் கொண்டு வந்தது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். இதற்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.

இந்த இடஒதுக்கீடு தொடர்பாக பாஜகாவும் சொந்தம் கொண்டாடுகிறதே?

முதலில் இதற்கான விதையைப் போட்டு அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தது யார்? உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடுத்தது அதிமுக.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் அதிமுக கலந்துக்கொள்ளாத நிலையில் உங்கள் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டுள்ளார்களே?

கூட்டணிக் கட்சிகளுக்குள் பொதுவாகக் கொள்கைகள் மாறுபடும். எங்கள் கூட்டணியில் தொடர்ந்து அவர்கள் இருக்கும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டது அவர்களின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. எங்கள் கோரிக்கை என்பது நூற்றாண்டை பொறுத்தவரை சுதந்திரம் கிடைத்து இந்திய அரசியல் அமைப்பு சபை நிர்ணயம் செய்தபடி 1952 ஆண்டைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அந்த அடிப்படையில்தான் 60 ஆம் ஆண்டை நாங்கள் கொண்டாடினோம். ஆனால் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றம் என்று விளம்பரம் தந்துள்ளார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் எங்கு இருந்தது.1921 ல் எங்கு இருந்தது. அப்போது ஒரு கவுன்சில்தான் இருந்தது. அது சட்டமன்றம் கிடையாது. தமிழ்நாடு சட்டமன்றமே 1952ல் தான் உருவானது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நூற்றாண்டு விழா என்று சொன்னால் எப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அவர்கள் இதில் மாட்டிக்கொண்டார்கள். தமிழக சட்டமன்ற நூற்றாண்டை பொறுத்தவரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கணக்கு 1937. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட ஆண்டு 1921. இந்த இரண்டிற்கும் முரண்பாடு உள்ளது. இது என்ன புதுகணக்கு என்று தெரியவில்லை.

சட்டசபை வைரவிழாவை 2012 ஆம் ஆண்டு கொண்டாடினோம், அதற்கும் இதேபோல் தான் முறைப்படி அழைப்பு விடுத்தும் அன்றைக்கு திமுக கலந்துக் கொள்ளவில்லை. அதேப்போன்று எங்கள் தலைவி ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு திமுகவுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

அதேபோல் நூற்றாண்டு விழா விவகாரத்திலும் ஏகப்பட்ட குழப்பம். அவர்கள் சொல்வது 1921 ஆம் ஆண்டு கணக்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொன்னது 1937 ஆம் ஆண்டு. அவர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளது. எங்கள் நிலைப்பாடு சுதந்திரத்திற்கு பின்னர் அமைந்த 1952 ஆம் ஆண்டு சட்டமன்றம் ஆகவே இந்த முரண்பாடு காரணமாகத்தான் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை.

எங்கள் ஆட்சிக் காலத்தில் மீனவர்களுக்கு முழுமையான அளவிற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சியிலிருந்து இறங்கும்போது ஒரு மீனவர்கூட சிறைச்சாலையில் கிடையாது. ஆனால் இப்போது அதிக அளவில் மீனவர்கள் தாக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எங்கள் கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்தும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

English summary
Former AIADMK Minister Jayakumar has posed some questions to CM MK Stalin on the issue of ADMK's boycott of M Karunanidhi portrait unveliing in the Tamil Nadu Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X