குரங்கு கையில பூ மாலை.. மோசமான நிலை.. ரைமிங்காக பாஜக ‘தலை’யை அட்டாக் செய்த காயத்ரி ரகுராம்!
சென்னை : ஒரு பெண்ணின் முன் பேசுவதற்கு தைரியம் இல்லை, ஆனால் 150 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுவது ஒரு மோசமான தரம். 'குரங்கு கையில பூ மாலை'. மோசமான நிலை என்று விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
பாஜக விவகாரம் பற்றி பொதுவெளியில் பேசியதால் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சாடி வருகிறார்.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்ததோடு காயத்ரி வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தினாவுக்கு கொடுத்த நிலையில், அப்செட்டான காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலை பற்றி விமர்சித்து வருகிறார்.
கேசவவிநாயகம், எல்.முருகன் 'வேற ஒருத்தருக்கு’ டார்கெட்.. ரொம்ப நாள் மறைக்கமுடியாது.. காயத்ரி 'பகீர்’!

காயத்ரி ரகுராம் ஆதங்கம்
திருச்சி சூர்யா சிவா - டெய்சி சரண் ஆடியோ விவகாரம் பற்றி ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராமை ஆறு மாதங்கள் கட்சியை விட்டு நீக்கம் செய்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த பொறுப்பு தனக்கு வரும் என்று எதிர்பார்த்து இருந்தார் காயத்ரி. ஆனால் அந்த பொறுப்பை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கிவிட்டார் அண்ணாமலை. இது காயத்ரியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் தொடர்ந்து ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அண்ணாமலை - காயத்ரி உரசல்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே, காயத்ரி ரகுராம் - அண்ணாமலை இடையே உரசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முன்னர் கலை கலாச்சார பிரிவு தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மீது புகார் தெரிவித்ததால், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அண்டை மாநில மற்றும் வெளிநாட்டு தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் பொறுப்பு காயத்ரிக்கு வழங்கப்பட்டது.

வார் ரூம் அட்டாக்
அப்போது முதலே அண்ணாமலை மீது கடுப்பில் இருந்து வந்தார் காயத்ரி. அண்மையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு காயத்ரி ரகுராம் அழைக்கப்படாதது அவரது ஆதங்கத்தை இன்னும் பெரிதாக்கியது. தான், சிலரால் புறக்கணிக்கப்படுவதாக ட்விட்டரில் வெளிப்படையாகவே தனது குமுறலைக் கொட்டி வந்தார். தனக்கு எதிராக அண்ணாமலையின் வார் ரூம் கும்பல் செயல்பட்டு வருவதாகவும், தன்னை விமர்சிப்பதே அவர்களுக்கு வேலை என்றும் கூறி அதிர்ச்சி கிளப்பி இருந்தார் காயத்ரி.

அவருக்கு ஒரு நியாயம்
காயத்ரிக்கு எதிராக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் களமிறங்கி கன்னாபின்னாவென ட்விட்டரில் விமர்சித்து வந்தனர். இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை, டெய்சி சரண் - சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தை காயத்ரி கையில் எடுத்ததும் அவரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார். அதேசமயம், பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய சூர்யாவிடம் விளக்கம் கேட்டு, அதன்பிறகு 6 மாதம் சஸ்பெண்ட் என அறிவித்தார். அவர் நடவடிக்கையில் மாற்றம் கண்டால் பதவி தேடி வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை.

அண்ணாமலை மீது அட்டாக்
இது காயத்ரியை மேலும் எரிச்சலூட்டிய நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அண்ணாமலையை மறைமுகமாக அட்டாக் செய்து வருகிறார் காயத்ரி. திருச்சி சூர்யா எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோரை விமர்சித்தது பற்றி நேற்று பதிவிட்ட காயத்ரி, சூர்யாவுக்கு எல்.முருகன் பற்றியோ, கேசவ விநாயகம் பற்றியோ புகார் சொல்ல அவசியமே இல்லை, இது தனிப்பட்ட வெறுப்பா அல்லது வேறொருவரின் வெறுப்பா? எனக் கேள்வி எழுப்பினார் காயத்ரி ரகுராம்.

குரங்கு கையில பூமாலை
இந்நிலையில் இன்று, "ஒரு பெண்ணின் முன் பேசுவதற்கு தைரியம் இல்லை, ஆனால் 150 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுவது ஒரு மோசமான தரம். அவர் ஆண் அழகு என்று அழைக்கப்படுவதில்லை, கிசுகிசு மன்னன் என்று அழைக்கப்படுகிறார். 'குரங்கு கையில பூ மாலை'. மோசமான நிலை" என்று விமர்சித்துள்ளார் காயத்ரி. காயத்ரியின் இந்தப் பதிவு அண்ணாமலையை தாக்குவது போல இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அண்ணாமலை ஆதரவாளர்கள், இந்தப் பதிவில் காயத்ரியை கடுமையாக அட்டாக் செய்து வருகின்றனர்.