"ராக்கெட் வேகத்தில் பறக்க போகுது தங்கம் விலை.." காரணத்தை ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் விலை: நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்த நிலையில், நேற்றைய தினம் ரூ.20 தங்கம் விலை அதிகரித்துள்ளது. இரு நாட்களாகத் தங்கம் விலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
தங்கம் விலை எதற்காக அதிகரித்துள்ளது என்பது குறித்த காரணத்தைச் சொன்ன அவர், இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் குறித்தும் விளக்கினார். மேலும், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை அதிகரித்துள்ளது. இப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.6,700க்கு மேல் இருக்கிறது. நான் முன்பே கூறியது போல சில காலம் தங்கம் ஒரு கிராம் ரூ.6,500இல் இருந்து ரூ.7,000 என்ற ரேஞ்சில் தான் இருக்கும். எனவே இந்த நேரத்தில் தங்கம் வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
கடந்த சில மாதங்களில் மட்டும் சீனா சுமார் 74 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பத்திரங்களை விற்றுள்ளது. சீனா மட்டுமின்றி அனைத்து வளரும் நாடுகளும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. இப்படி அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலேயே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
ராக்கெட் வேகம்: பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள். இதன் காரணமாகத் தங்கம் நிச்சயம் உயரும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏற தொடங்கும்" என்றார்.
வரும் காலம்: தொடர்ந்து வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிய அவர், "அமெரிக்கப் பொருளாதாரத்தில் இருந்து பொருளாதார ரீதியாக தங்களை விலக்கிக் கொள்ளவே சீனா இதுபோல அமெரிக்கப் பத்திரங்களை விற்று.. தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த காலங்களில் இரு நாடுகளும் மாற்றி மாறி வரி போட்டு ஒரு வித மறைமுக போர் உருவாகும் சூழல் வரை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சீனா அமெரிக்காவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு இருக்கிறது.
சர்வதேச அளவில் அமெரிக்கா ஒரு பாதையிலும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஒரு பாதையிலும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து மத்திய வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துவிட்டார்கள். அவர்கள் ஒரு பாதையில் செல்வார்கள். அதேநேரம் அமெரிக்கா வரும் பணவீக்க டேட்டா பொறுத்தே முடிவு எடுப்பார்கள். எனவே, உலக பொருளாதாரம் இரு வேறு பாதைகளாகப் பிரிந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் அதிகரிக்கும்: இப்போது அமெரிக்கப் பணவீக்கம் குறையவில்லை என்றால்.. அவர்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார்கள். இதனால் அமெரிக்க டாலர் வலுவடையும் யூரோவும் பிரிட்டன் பவுண்ட் அழுத்தத்தை எதிர்கொள்ளும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications