ஈசிஆர் சாலையில் விபத்தில் சிக்கி துடித்த இளைஞர்.. முதலுதவி சிகிச்சை தந்த ஆளுநர் டாக்டர் தமிழிசை!
சென்னை: புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு தலையில் அடிப்பட்ட இளைஞருக்கு ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி் அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவ படிப்பு படித்தவர். தாம் பயணிக்கும் இடங்களில் பொதுமக்களில் எவருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அங்கேயே சிகிச்சை அளித்து உதவி செய்யக் கூடியவர்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது சாலிகிராமம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க சென்றார் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்தார். அத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை, பாஜக வேட்பாளராகவும் களம் கண்டார்.

வாக்கு சாவடியில்...
சாலிகிராமம் பாலலோக் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க சென்றார் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் திடீர் உடல்நலன் பாதிப்பால் மயக்கமடைந்தார். இதனைப் பார்த்த தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக சென்று அந்த போலீஸ்காரரை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அனைவரும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேயத்தை பாராட்டினர்.

விமானத்தில்..
அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். விமான நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பயணி ஒருவர் மயக்கம் அடைந்தார். அப்போது மயக்கம் அடைந்த பயணியிடம் சென்று பரிசோதித்து அவருக்கான முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். டாக்டர் தமிழிசை, ஆளுநர் என்றும் பார்க்காமல் மனித நேய அடிப்படையில் முதலுதவி அளித்தது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றது.

சென்னை ஈசிஆர் சாலையில்..
இந்த வரிசையில் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர்தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் காணப்பட்டார். உடனே தமிழிசை சவுந்தரராஜன் காரில் இருந்து இறங்கி இளைஞருக்கு முதலுதவி அளித்து செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், SRM மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மனிதநேய சிகிச்சை
பின்னர் அந்த மருத்துவமனை மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். விபத்துக்குள்ளான இளைஞருக்கு இரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ள தமிழிசை, வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன்!


Click it and Unblock the Notifications
