"இப்படித்தாங்க ஆரம்பிப்பீங்க.." நறுக்கென சொன்ன பொன்முடி.. நயினார் தலைமையில் பாஜக வெளிநடப்பு
சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்வதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள், க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது

முதல்வர் ஸ்டாலின்
இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீட் தேர்வைப் போலவே, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதோடு, மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் மேலும் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதினார். இந்நிலையில் தற்போது தமிழக சட்டசபையில் நடைபெற்று வரும் துறைகள் மீதான மானியக் கோரிக்கை அமர்வின் போது, மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கட்சிகள் ஆதரவு
அடுத்ததாக தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் திமுக , அதிமுக, பாமக, மதிமுக, தாவக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தாவக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினரான நயினார் நாகேந்திரன், க்யூட் தேர்வு காரணமாக பாதிப்புகள் இருக்காது என்றும் தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியிருப்பதாக பேசினார்.

பொன்முடி கிண்டல்
அப்போது குறுக்கிட்ட தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலில் இப்படித்தான் ஆரம்பிப்பீர்கள், நீட் தேர்வு வரும் போதும் அப்படித்தான் சொன்னாங்க.. அப்போ நீட்.. இப்போ க்யூட்.. எனப் பேசினார். இதனால் ஒரு நிமிடம் பேசாமல் நின்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனை ரத்து செய்யக் கோரி பாஜக வெளிநடப்பு செய்கிறது எனக் கூறி வெளியேறினார்.












Click it and Unblock the Notifications