கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம்.. சட்டென கேன்சல் செய்யப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நிகழ்ச்சி!
சென்னை: சமீப காலமாக கூட்ட நெரிசலால் விபத்து ஏற்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால், ஹிப்ஹாப் தமிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, "நான் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலாக பீனிக்ஸ் மாலில் காத்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால்.. பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல்துறை, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய அறிவுறுத்தினர்.

கட்டுக்கடங்காத கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல்.. அதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் அனைவரையும் பார்க்க நான் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் மாலில் கூட்டம் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை என்கிற காரணத்தால் என்னை கிளம்ப சொல்லிவிட்டார்கள். எனவே அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து.. மிகுந்த மன வருத்தத்துடன், வேதனையுடன் புறப்பட்டுவிட்டேன்.
நிகழ்ச்சி குறித்து மிகுந்த ஆவலாக இருந்தேன். எல்லோரையும் பார்த்து செமையாக என்ஜாய் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். கூடிய விரைவில் மீண்டும் சந்திக்கலாம். எனக்காக வந்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் பாதுகாப்புக்காகவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர். காவல்துறையின் அறிவுறுத்தலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. மற்றொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்" என்று கூறியிருக்கிறார்.
கூட்ட நெரிசல் விபத்து
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும், கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் ஒடிசாவின் பூரி ஜகநாதர் கோயிலின் தேரோட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 120 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட விபத்தில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
