சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மேயர் பிரியா! - மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மீண்டது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: 'மழையை வைத்து எப்படியாவது அரசியல் செய்துவிடலாம்' என நம்பிக் கொண்டிருந்த தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாயடைத்துப் போய் உட்கார்ந்துவிட்டன.

சரி.. 'சென்னையில் உள்ள சாலைகள் எல்லாம் அலங்கோலமாகப் பிரித்துப் போடப்பட்டுள்ளன' எனக் கூறி மக்களை திசைதிருப்பவும் திட்டமிட்டனர். அதுவும் நடக்காமல் போய்விட்டது.

சென்னையில் சில நாள்களாகப் பெய்த மழையை தனது நிர்வாகத்திறனால் சீரமைத்திருக்கிறார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

’டார்கெட்டை’ எப்படியும் முடிச்சுருவார்! அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்! ’டார்கெட்டை’ எப்படியும் முடிச்சுருவார்! அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

ஸ்டாலின் விரும்பிய சென்னை:

ஸ்டாலின் விரும்பிய சென்னை:

1996 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தபோதே, பழைமைவாய்ந்த சென்னையை 'சிங்காரச் சென்னை'யாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் சென்னையில் திரும்பும் திசையெல்லாம் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய அடையாளத்தைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, சென்னையின் முகத்தை நவீனமாக்கும் முயற்சியில் மிகப் பெரிய பங்களிப்பை ஸ்டாலின் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஹாட் ஆஃப் த சிட்டியாக திகழும் சென்னை பெருநகர மாநகராட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை இளம்பெண்ணான பிரியா ராஜனிடம் அவர் ஒப்படைத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் பலமுனைகளிலும் வெளிப்பட்டன.

'ஏதோ பட்டியலின வகுப்புக்குப் பதவி தரவேண்டும் என்பதற்காக பிரியா ராஜனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது' என்ற தொனியில் சமூகவலைத்தளத்தில் பலரும் கருத்து மழை பொழிந்தனர். ஆனால், அந்தக் கருத்து கந்தசாமிகளுக்கு எல்லாம் சரியான பதிலை மழை நிவாரண பணிகளைச் சரியாகக் கையாண்டதன் மூலம் மேயர் பிரியா ராஜன் கொடுத்துள்ளார்.

உலகளவில் சென்னை மாநகராட்சி தனித்துவமானது. உலகில் 2-வது பழைமையான அமைப்பாக சென்னைப் பெருநகர மாநகராட்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கையாளும் மக்கள் தொகைக்கு ஈடான மக்கள்தொகை உள்ள ஒரு நகரம் சென்னை. ஏறக்குறை 300 ஆண்டுகளுக்கு மேலாகப் பழைமையான நகரம் இது. எந்தவித நேர்த்தியான திட்டமிடலும் இல்லாமல் உருவான ஒரு மாநகரம்.

இந்த நகரத்தில் முறையான அளவில் சாலைகள் இல்லை. பல பகுதிகள் இன்றும் சந்தடிமிக்க சாலைகளாகவே காட்சி தருகின்றன. முறையான மழைநீர் வடிகால்களோ அல்லது தரமான கழிவுநீர் வெளியேற்றும் பாதாளச் சாக்கடை வழித்தடங்களோ இல்லை.

ஆனால், இதே அளவு பழைமையான நகரமான கொல்கத்தாவில் பாதாளச் சாக்கடைக்கான வழிப்பாதைகள் 200 ஆண்டுகளுக்கு முன்பே முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாதாளச் சாக்கடைகளின் உள்ளே ஒரு லாரியையே கொண்டு செல்லலாம். அந்தளவுக்கு ஆழமும் உயரமும் கொண்டவை. ஆனால், சென்னை அப்படியில்லை. ஒழுங்கு செய்யப்படாத மக்கள்பெருக்கத்தால் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே செல்கிறது.

ஆசிரியர் கனவு டு சென்னை மேயர்

ஆசிரியர் கனவு டு சென்னை மேயர்

இவ்வளவு பழைமையான ஒரு நகரத்தின் பிரசினையை மேயர் பிரியா ராஜன் என்ற ஓர் இளம்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, அவர், 'இதை உடனே செய்து முடித்துவிடுவார்' என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதற்கென நீண்ட அவகாசம் அவருக்குக் கட்டாயம் தேவை.

கடந்த 2022 மார்ச் மாதம்தான் மேயராக பிரியா பொறுப்பேற்றார். அதற்குமுன் அரசியல் அனுபவம், நிர்வாகத் திறன் எதுவுமில்லாத அவருக்குள் ஆசிரியை ஆகும் கனவு மட்டுமே ஒளிந்துகொண்டிருந்தது. ஆனால், அவரது வார்டு பெண் வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்டபோது, தனது தந்தையின் விருப்பத்துக்காக தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போதுகூட, 'வார்டு உறுப்பினர்' என்ற சின்ன நம்பிக்கையுடன் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால், 'திடீர்' என்று வீசிய அரசியல் அலை அவரது பக்கம் திரும்பியது. 'பட்டியலினப் பெண்ணுக்கு இந்தப் பதவியைத் தர வேண்டும்' என்ற கருத்துகள் முன்வைக்கப்படவே, மேயர் என்ற வளைத்துக்குள் பிரியா வந்தார்.

சென்னையின் மேயராக அவர் பதவியேற்று 7 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்தநேரத்தில், சென்னையின் மழைநீர் வடிகால் பணிக்கான திட்ட முன்வடிவு ஐஐடியிடம் கோரப்பட்டது. அதன் வல்லுநர் குழு மிக விரைவாகத் திட்டமிட்டு ஒரு புளூபிரிண்டை கொடுத்தது.

இதனைத் தயாரிப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆனது என வைத்துக் கொள்வோம். அதன்பின் சென்னை பெருநகர மாநகராட்சியின் பொறியாளர்கள் அதனை ஆய்வு செய்தனர். இதற்குக் குறைந்தது ஒரு மாத அவகாசம் என வைத்துக் கொள்வோம்.

அதன்பின் அத்திட்டம் அமைச்சர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டு மீண்டும் முதலமைச்சரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு ஒரு மாதம் எனக் கணக்கிட்டால்கூட காகித வடிவிலான இந்த வேலைகளுக்கே மூன்று மாதம் ஆகிவிடும்.

ஆக, மேயராக பிரியா பதவிக்கு வந்தபின் இந்த வேலைக்கான காலவரம்பில் 3 மாதங்களைக் கழித்துவிட்டால், மீதம் உள்ளது 4 மாதங்கள்தான். எப்படிப் பார்த்தாலும், இந்தப் பணிகள் உரிய காலஅளவில் தொடங்கின என்பதை விளக்குவதற்காகவே ஒரு தோராயக் கணக்கை முன்வைக்கிறோம்.

ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சிலர் என்ன சொல்கிறார்கள்? 'இந்தப் பணிகளை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்' என்று. ஆட்சிக்கு வந்த பிறகுதானே வேலைகளைத் தொடங்க முடியும். ஆனால், 'கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அதன்பின் வந்த எடப்பாடி பழனிசாமியோ ஏன் செய்யவில்லை?' என பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை ஒருநாளும் பேசியதும் இல்லை.

ஆனால், மேயராக பிரியா பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே சென்னையின் மழைநீர் வடிகால் பணிகளை அவர் தொடங்கிவிட்டார். அவரது ஆட்சிக்கால அனுபவமும் பணிகளின் காலஅளவும் ஒன்றுதான். இந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் பெற்ற ஜெயலலிதாவினால் சமாளிக்க முடியாத ஒரு பேரிடரை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

 கண்டுகொள்ளாத ஆங்கில ஊடகங்கள்

கண்டுகொள்ளாத ஆங்கில ஊடகங்கள்

அன்று அவரது ஆட்சிக்காலத்தில் மூழ்கிய மாம்பலத்தை இன்று ஒரு சொட்டு நீர்கூட தேங்காத பகுதியாக மாற்றிக் காட்டி இருக்கிறார் மேயர் பிரியா. அதற்கு 'தி இந்து' குழுமத்தில் இருந்து வெளிவரும் 'பிரண்ட்லைன்' ஏட்டின் இணை ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவே சாட்சி.

அவர் தனது பதிவில், 'இது பெரிய வேலை. மேற்கு மாம்பலம் பகுதி மக்கள், சென்னை பெருநகராட்சியை ஆதரிக்கின்றனர். இந்த மாற்றத்தைப் பற்றி விரிவாக எழுதாமல் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் பின்வாங்குவது ஏன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தவறு செய்யும்போது விமர்சியுங்கள். ஆட்சியாளர்கள் சரியாகச் செய்யும்போது தட்டிக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளார்.

மாம்பலம் பகுதியில் மாமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த உமா ஆனந்த். அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தத் திட்டப்பணிகள் சரியாக நடந்ததற்காக மேயரை பாராட்டியிருக்க வேண்டும். அவர் செய்தாரா? குறைந்தபட்சம் அந்தப் பகுதிக்கு அண்ணாமலையை அழைத்து உண்மை நிலையைப் புரிய வைத்திருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை.

வெறும் விமர்சனத்தால் அரசியல் செய்யும் அண்ணாமலை இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ்நாட்டுக் களம் அவருக்கு ஆதரவாக இல்லை என்பதே நிதர்சனம்.

கடந்த மழையில் மாம்பலம் எப்படித் தத்தளித்தது என்பதை அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாடே அறியும். அதையும் மாற்றிக் காட்டியுள்ளார், மேயர் பிரியா. இந்த மாற்றத்துக்கு மூளையாக இருந்துள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேயர் பிரியாவிடம், 'முதல்கட்ட பரீட்சையில் நீங்க பாஸ் பண்ணீட்டீங்களா??' என்று கேட்டால், 'நிச்சயமாக பாஸ் பண்ணிட்டோம். 90 சதவீத மதிப்பெண் எடுத்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது' என்கிறார். அவருக்கு மட்டும் இல்லை இந்த உணர்வு திரு.வி.க நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை, சீதாம்மாள் காலனி, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் எனப் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இருக்கிறது.

‘ஜெயா ப்ளஸ்’ -க்கு புரிந்த உண்மை

‘ஜெயா ப்ளஸ்’ -க்கு புரிந்த உண்மை

ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும் ஏனோ இந்தப் புரிதல் இல்லை. மழை வெள்ளத்தைச் சமாளிப்பதற்காக நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணிவரையில் மேயர் பிரியா உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள், பம்பரமாக வேலை பார்த்துள்ளனர்.

எப்போதும் எதிர்க்கட்சியாகவே செயல்படும் 'ஜெயா ப்ளஸ்' தொலைக்காட்சிகூட மேயர் பிரியாவின் நள்ளிரவு ஆய்வு குறித்து செய்து வெளியிட்டது.

கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்தது. இந்த இரண்டு நாளில் பெய்த மழையின் அளவு 7 செ.மீட்டர். இந்த ஆண்டு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை திரு.வி.க மண்டலப் பகுதியில் பெய்த மழையின் அளவு 15 முதல் 30 செ.மீட்டர். கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு மழையின் அளவு பதிவாகியுள்ளது.

கொளத்தூர், புளியந்தோப்பு போன்ற பகுதிகள் பொதுவாக மழைநாள்களில் இடுப்புளவு நீர் தேங்கும். கடந்த ஆண்டு மழைநீர் வடிய 4 அல்லது 5 நாள்கள் வரை ஆனது. ஆனால், தற்போது இடுப்பளவு நீர் இல்லை. இதனை அந்தப் பகுதி மக்களே உறுதி செய்துள்ளனர். அத்துடன் ஒரே இரவில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கு மழை அதிகமாகப் பெய்தும், அதன் பாதிப்புக் குறைவாகத்தான் உள்ளது.

ஆனால் இதை எல்லாம் பேசாமல், 'எதையும் செய்யவில்லை' என எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக சென்னையை மறுகட்டமைப்பு செய்வதற்கு விதம்விதமான திட்டங்கள் செயல்வடிவம் பெற்றுள்ளன.

4 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்கள்

4 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்கள்

சிங்காரச் சென்னை திட்டம், உலக வங்கியின் நிதியளிப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம், கொசஸ்தலை ஆறு சீரமைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களின்கீழ் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், கொசஸ்தலை ஆறு சீரமைப்புத் திட்டம் முடிய 2024 ஜனவரி வரை ஆகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய திட்டம். இதில் சிங்காரச் சென்னை பணிகள்தான் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதைத்தான் 'பேக்கேஜ்' எனச் செய்தியாளர்கள் மத்தியில் மேயர் பிரியா கூறினார்.

உடனே நெட்டிசன்கள், 'பேக்கேஜ்' தெரியாமல் பேசுகிறார்' என மீம்ஸ் போட்டனர். 'ரெயின் பேஞ்சுது' என அவர் கூறியதற்கும் மீம்ஸ் தயாரித்தனர். யார் வேண்டுமானாலும் மீம்ஸ் போடலாம். ஆனால், '28 வயதில் ஒரு பெண் 300 ஆண்டு பழைமையான ஒரு நகரத்தை மறுகட்டமைப்பு செய்கிறார்' என்பதைப் புரிந்து கொண்டு மீம்ஸ் போட வேண்டும்.

சென்னையின் மழைநீர் வடிகால் பணிகள் என்பது எளிமையான வேலை இல்லை. மேயர் பிரியா பொறுப்புக்கு இந்த 6 மாதகாலத்தில் பணியைச் செய்வதும் அதற்கான பலனைக் கொண்டுவருவதும் சிரமம். இத்திட்டப் பணிக்காக ஐஐடியுடன் கூடி ஆலோசித்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பெருநகர மாநகராட்சியின் பொறியாளர்களை வைத்துச் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வழிகாட்டலின்படி முதலில் தரைவழியாகப் போடப்பட்டுள்ள மின் இணைப்புப் பாதைகளைக் கண்டறிய வேண்டும். அதேபோல, மெட்ரோ குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய்களைக் கண்டறிந்து அதில் பழுதுநேராமல் பாதையை வகுக்க வேண்டும். மரங்களை வெட்டாமல் பணியைச் சீரமைக்க வேண்டும் எனப் பல நெருக்கடிகள் உள்ளன.

1350 கி.மீட்டருக்கு தூர்வாரும் பணிகள்

1350 கி.மீட்டருக்கு தூர்வாரும் பணிகள்

இப்படியொரு சிக்கலான பணியை, 'மண்டலவாரியாக மேற்கொண்டிருக்கலாம்' என்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் ஒரு பகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். 'எங்கள் பகுதிக்கு முதலில் செய்திருக்கலாம்' என்று பலர் கருத்தை முன்வைத்திருப்பார்கள். அதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்ட குழு தவிர்த்துள்ளது.

குறிப்பாக, ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்த நாள்முதல் மழைநீர் வடிகால் பணிக்காக வாரம் 2 கூட்டங்கள் மாநகராட்சியில் நடத்தப்பட்டுள்ளன. வெறும் கூட்டம் மட்டும் போடவில்லை. 1350 கி.மீட்டர் அளவுக்குத் தூர்வாரி உள்ளனர். 33 கால்வாய்களை தூர்வாரியுள்ளனர். மூன்று மாதம் முன்பே இரண்டுமுறை தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

குறிப்பாக, இப்பணிகள் அனைத்தும் நள்ளிரவு நேரத்தில் செய்யப்பட்டன. போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு அதிக சிரமம் கொடுக்காதபடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

அதிலும், வடசென்னையில் உள்ள கணபதி சிவா நகர் என்பது மிகவும் தாழ்வான பகுதி. லேசாக மழைபெய்தால்கூட நீர் தேங்கும். அந்தப் பகுதியில் தேங்கும் மழைநீரை ராட்சத எந்திரம் மூலம் ரெட்டேரிக்கு கொண்டுசெல்லப்பட்டு நீரை இறைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதற்கான நவீன கட்டுமானங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், மழையைச் சமாளிக்க 10 ஹெச்.பி முதல் 100 ஹெச்.பி வரை மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

'பொம்மை' மேயரா பிரியா?

'பொம்மை' மேயரா பிரியா?

இவ்வளவு பணியையும் ஒரு பெண் செய்துவிட முடியுமா? அவரது ஆறு மாத அனுபவத்தில் இது சாத்தியமா? ஆகவே, அவர் துறைரீதியாக உள்ள அமைச்சர்களிடம் ஆலோசித்துத்தான் ஆக வேண்டும். சென்னையில் முக்கிய அமைச்சர்களாக சேகர்பாபுவும் மா.சுப்பிரமணியமும்தான் உள்ளனர். அவர்களின் ஆலோசனை பெறுவது இளம் மேயரான பிரியாவின் கடமை. அதைச் செய்தால் அவரை 'பொம்மை' எனச் சிலர் விமர்சிக்கின்றனர்.

இந்தப் பொம்மை மேயர் பிரியாதான், சென்னை மாநகரை மழையிலிருந்து காப்பாற்றி உள்ளார். இனி வரும் காலங்களிலும் காப்பாற்ற உள்ளார்.

English summary
All the opposition parties of Tamil Nadu, who were hoping that they could use the rain to make politics, have remained silent. Well.. They also planned to divert people by saying that 'all the roads in Chennai are divided in a chaotic manner'. That didn't happen either. Chief minister M.K. Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X