செங்கோட்டையன் இடத்தை பறித்த எடப்பாடி.. பொதுக்குழு உறுப்பினர்கள் டெண்டர் - போட்டு தாக்கும் ஜெ. குரல்!
சென்னை : செங்கோட்டையன் தான் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்பதாக இருந்தது என்றும் டெண்டர் பலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் பணத்தை வைத்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களையும் வாங்க முடியும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் திட்டமிட்டு அவமதிக்கப்படுவதாகக் கூறி, நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் மருது அழகுராஜ். ஜனநாயகமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மருது அழகுராஜ்
அதிமுக செய்தித் தொடர்பாளரான மருது அழகுராஜ், செயலலிதா இருந்தபோது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது எம்.ஜிஆர்' ஆசிரியராக இருந்தவர்கள். பல ஆண்டுகாலமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்தவர். ஜெயலலிதாவின் பல புகழ்பெற்ற பேச்சுகளுக்குப் பின்னணியாக இருந்தவர். ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடி தரப்பு தொடங்கிய‘நமது அம்மா' நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் செயல்களால் அதிருப்தி அடைந்து பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்ட அவர் கடுமையாக ஈபிஎஸ் தரப்பை சாடி வருகிறார்.

அரசியல் அபகரிப்பு
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், "நில அபகரிப்பு செய்வது போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பை அவசரமாக செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இது ஜனநாயக படுகொலை. தொண்டர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். நிர்வாகிகள் ஒருபக்கம், தொண்டர்கள் ஒரு பக்கம் என்கிற நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டெண்டர்கள் ஒருபக்கம், தொண்டர்கள் ஒருபக்கம்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன் தான் கட்சியின் மூத்தவர் என்கிற முறையிலே இடைக்கால முதலமைச்சராக வரவேண்டியவர். ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனதற்கு காரணம், மொத்த எம்.எல்.ஏக்களையும் டெண்டர் எடுக்கும் வசதி அன்று செங்கோட்டையனிடம் இல்லை. கூவத்துரில் சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுக்கும் வசதி எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது. அதனால், அன்று செங்கோட்டையன் முதல்வர் ஆகவில்லை. அன்று சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுத்த எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களை டெண்டர் எடுத்துள்ளார்.

டெண்டர்
டெண்டர் எடுத்துப் பழக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று தொண்டர்களையும் டெண்டர் எடுத்து விடலாம் என நினைக்கிரார். இன்று அவரிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களையும் வாங்க முடியும். பணத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என நினைப்பவர்களால் கட்சி வளைக்கப்பட்டுள்ளது.

அதிமுக என்பதே ஒரு சாதி
அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம். அதிமுக என்பதே ஒரு சாதி. ஆனால், இன்று ஒரு குழு மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது. சாதி ரீதியாக செயல்படத் தொடங்கி இருக்கிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அட்டையை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இதுவரை உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. உறுப்பினர்கள் ஆதரவு அளித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிலை வரலாம் என்பதற்காக உறுப்பினர் அட்டைகளை வழங்காமல் வைத்துள்ளனர்.
Recommended Video

தேர்தல் நடத்த வேண்டும்
உங்களுக்கு உண்மையிலேயே 90 சதவீத ஆதரவு இருக்கிறது என்றால், கட்சியின் உறுப்பினர் பட்டியலை வெளியிட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையை அனுமதித்து, தொண்டர்கள் வாக்களிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். திமுக, பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அதனால், அதிமுகவிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு அடுத்த தலைமுறையினரை நோக்கி கட்சியை வழிநடத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications