ரயிலில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் கொண்டு போகலாம் தெரியுமா? ரூல்ஸ் தெரியாமல் மாட்டிக்காதீங்க
சென்னை: ரயிலில் பயணம் செய்யும் பலருக்கும் ஒரு சந்தேகம் வரக்கூடும். ரயிலில் அதிகபட்சம் எவ்வளவு தங்க நகைகள் நாம் கொண்டு செல்ல முடியும் என்று?.. ஆண்கள் என்றால் எவ்வளவு நகைகளை கொண்டு செல்ல முடியும்? பெண்கள் என்றால் எவ்வளவு நகைகள் கொண்டு செல்ல முடியும்? ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்ற சந்தேகங்களுக்கு முழு பதிலுடன் விவரமாக பார்க்கலாம்.
தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அதன் மீது மக்களுக்கு இருக்கும் ஆசை குறைவது கிடையாது. இந்தியாவை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடாக மட்டும் அல்ல; மக்கள் விரும்பி அணியும் அணிகலனாகவும் உள்ளது.

ரயிலில் எவ்வளவு நகைகள் கொண்டு செல்லலாம்
குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிகலனாக அணிகிறார்கள். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் தங்க நகைகளை அணிவதைப் பார்ப்பது சாதாரணம்தான். இதனால், பயணத்தின் போதும் பெரும்பாலான பெண்கள் தங்க நகைகளை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.
பல லட்சக்கணக்கான பயணிகள் தங்க நகைகளை எடுத்துச் செல்வதை ரயில்களில் பார்க்க முடிகிறது. ஆனால், ரயில்வே பயணத்தின் போது அதிகபட்சம் எவ்வளவு தங்க நகை வைத்திருக்கலாம் என்று பலருக்கும் தெரியாது. இதனால், அதிகப்படியான தங்க நகைகளை எடுத்து செல்லும் போது அதிகாரிகள் சோதனை செய்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்ற அச்சம் சில பயணிகளுக்கு ஏற்படலாம்.
ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன?
இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்க நகைகள் "வழக்கமான லக்கேஜ்" ஆகவே கருதப்படுகின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால், அனுமதிக்கப்பட்ட அளவில் தங்க நகைகள் எடுத்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை. அதே சமயம் அளவுக்கு அதிகமாக தங்கம் எடுத்து சென்றால், அது வரி விதிகள் அல்லது வருமான வரி அதிகாரிகளின் கண்காணிப்பிற்குள் வரும்.
தங்கம் தொடர்பான சிறப்பு விதிகள் ரயில்வேக்கு கிடையாது. எனினும், உங்களிடம் உள்ள நகைகளுக்கான சட்டப்பூர்வ ஆதாரங்களை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. சட்டப்படி வாங்கப்பட்ட தங்கத்தை எடுத்து செல்ல எந்தத் தடையும் இல்லை. ஆனால் வரி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் அதை பறிமுதல் செய்து, கூடுதல் ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை கேட்டுக்கொள்ளலாம்.
CBDT விதிகள் என்ன சொல்கின்றன?
CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) விதிப்படி:
* திருமணமான பெண்கள்: அதிகபட்சம் 500 கிராம் வரை தங்கம் ஆவணமில்லாமல் வைத்திருக்கலாம்
* திருமணமாகாத பெண்கள்: அதிகபட்சம் 250 கிராம்
* ஆண்கள்: திருமணமானவர்களாக இருந்தாலும், இல்லையென்றாலும் 100 கிராம் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
இவை அனைத்தும் ஆவணங்கள் இல்லாத தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும். உங்கள் வசம் உள்ள தங்கம் வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரங்கள் இருந்தால், எந்த அளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
ஆதார ஆவணங்களுடன்
தங்க நகைகளை ரயிலில் எடுத்து செல்லலாம். ஆனால் அவை குறித்து உரிய வருமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் எந்தச் சிக்கலிலும் சிக்காமல் செல்ல முடியும். எனவே, பாதுகாப்புக்காகவும் சட்டப்படி நிம்மதியாக பயணிக்கவும், தங்கத்தை எடுத்துச் செல்லும் போது தேவையான பில்-கள் அல்லது ஆதார ஆவணங்களுடன் பயணம் செய்யவும்.












Click it and Unblock the Notifications