சாப்பாட்டுக்கு கஷ்டம்! பசியாற்றிய வடபழனி கோயில் சுண்டல், பொரி கடலை! நவராத்திரியில் இளையராஜா உருக்கம்
சென்னை: அந்த காலத்தில் வடபழனி கோயில் தெருவில் நவராத்திரியின் போது கடைகளில் கொடுக்கப்படும் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு பசியாற்றியதாக இசைஞானி இளையராஜா உருக்கமாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: 1968 ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த போது வடபழனி கோயில் இருக்கும் தெருவில் நிறைய கடைகளில் நவராத்திரியின் போது, பொரி கடலை, சுண்டல் கொடுப்பார்கள். இதை எல்லாரும் வரிசையில் நின்று வாங்கிச் செல்வர்.

நான், பாரதிராஜா, பாஸ்கர் ஆகிய 3 பேரும் எந்தெந்த கடைகளில் சுண்டல், பொரி கடலை கொடுக்கிறார்களோ அதையெல்லாம் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து நியூஸ் பேப்பரை விரித்து அதில் பொரி கடலை, சுண்டல் என என்னென்ன பிரசாதம் கொடுத்தார்களோ அதையெல்லாம் போட்டு ஒன்றாக சாப்பிட்டு பசியாற்றினோம்.
அவற்றை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு படுத்துக் கொள்வோம். இதை நினைவில் வைத்துக் கொண்டு நவராத்திரி விழாவில் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உணர்வு என் மனைவிக்கு ஏற்பட்டு, நவராத்திரி விழாவை வீட்டில் நடத்தி அன்னதானமும் பலகாரங்களும் வழங்கி வருகிறோம். இவ்வாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் வீட்டில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அவரது மனைவி ஜீவா இருந்த போதிலிருந்தே இந்த விழா கொண்டாடப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்படும். அவருக்கு பிறகு மகள் பவதாரிணி இந்த விழாவை விடாமல் நடத்தி வந்தார்.
அவரும் காலமாகிவிட்ட நிலையில், இளையராஜா தற்போது அந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வயிறார சாப்பாடும் பலகாரங்களையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகளின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து இளையராஜா வீட்டில் அன்னதானமும் பலகாரங்களும் வழங்கப்பட்டன.
நவராத்திரி கொண்டாட்டங்களை இளையராஜா 1980-களில் இருந்து செய்து வருகிறார். இது மனைவி ஜீவாவின் யோசனையாகும். சென்னையில் திரைப்படத் துறையில் சாதிக்க வந்த போது நவராத்திரியின் போது இளையராஜா வசித்த பகுதி இடுப்பளவு மழை தண்ணீருடன் சூழ்ந்திருந்ததாம். அப்போது சாப்பிடுவதற்காக பாரதிராஜா, இளையராஜா, பாஸ்கர் ஆகியோர் ராம் தியேட்டரில் இருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு சென்று அங்கு கொடுக்கும் சுண்டல்களை வாங்கி சாப்பிடுவார்களாம்.
அந்த சுண்டல், பொரி கடலைகளை 3 நாட்கள் வைத்திருந்து சாப்பிடுவார்களாம். இந்த சம்பவத்தை இளையராஜா தனது மனைவி ஜீவாவிடம் தெரிவித்த போது கலங்கிய அவர், அது முதல் நவராத்திரியின் போது 10 நாட்களும் தனது வீட்டில் அனைவரையும் வரவழைத்து உணவு பரிமாறி வந்தாராம்.
மறைந்த மாண்டலின் சீனிவாஸ்தான் இளையராஜாவின் வீட்டில் முதல்முதலில் நவராத்திரியின் போது இசை நிகழ்ச்சி நடத்தினாராம். அன்று தொடங்கியது இன்று வரை சென்றுக் கொண்டிருக்கிறது.
இளையராஜாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இன்று லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்ல அடிதளமிட்டது தான்தான் என இளையராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். அது போல் கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்கும் அவர் அடிக்கடி செல்வார்.




Click it and Unblock the Notifications
