“ராமர்”போல் ஓபிஎஸ்.. “அணில்”போல் நான்! பாலம் கட்ட உதவுவேன் - அணி தாவிய உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன்
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில்போல் நானும் ஓ.பன்னீர்செல்வம் பின் நின்று உதவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதனை தொடர்ந்து கடந்து17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர்.

அணி தாவல்
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கு இருவர் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நடப்பதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அணி தாவ தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

உசிலம்பட்டி எம்எல்ஏ
இந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஏற்கனவே அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் தற்போது எம்.எல்.ஏக்கள் பலம் 4 ஆக அதிகரித்துள்ளது.

அணில்போல் இருப்பேன்
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. ஐயப்பன், "தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, ஓ.பன்னீர்செல்வம் பின் நின்று, ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில்போல் நானும் உதவியாக இருப்பேன். மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் திமுகவை அகற்ற அதிமுக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications