மக்களின் வருமானம் எதுவுமே மாறாத நிலையில், வருடம் தவறாமல் சுங்க கட்டணம் உயர்த்துவது சரியா?
சென்னை: மக்களின் வருமானம், வாழ்க்கை தரம் எதுவுமே மாறாத நிலையில், வருடம் தவறாமல் சுங்க கட்டணம் உயர்த்துவது சரியா? என்ன மாறிவிட்டது என்று ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்த அரசு அனுமதி அளிக்கிறது. மக்களின் அடிப்படை வருமானம் மிகமோசமான நிலையில் இருக்கிறது என்று மக்கள் குமுறுகிறார்கள். பணவீக்கம் அடிப்படையில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் பணவீக்கத்தின் படி மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்பதே கடந்தசில ஆண்டுகளில் நிஜமான உண்மை. ஏனெனில் சம்பள உயர்வே பல நிறுவனங்களில் வழங்கப்படவில்லை என்கிறார்கள் மக்கள்.
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடப்பது தான். இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு நவீனமடைந்து வருவதாக அரசு ஒருபுறம் பேசி வருகிறது. மறுபுறம் 'சுங்கக் கட்டண உயர்வு' என்ற பெயரில் சாமானிய மக்களின் பாக்கெட்டில் கைவைப்பது தொடர்கதையாகி வருகிறது. மக்களின் அடிப்படை வருமானம் உயராத நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது.

என்ன மாறிவிட்டது என்று இந்த உயர்வு?
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்: 'பணவீக்கம்' . ஆனால், இங்கேதான் ஒரு பெரிய முரண் இடிக்கிறது. நுகர்வோர் விலைவாசி உயர்வுக்கும், மக்களின் வருமான உயர்வுக்கும் இடையே உள்ள இடைவெளி விண்ணை முட்டுகிறது. ஒரு சாமானிய ஊழியரின் சம்பளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே இருக்கும்போது, அவர் பயன்படுத்தும் சாலைக்கான வாடகை மட்டும் எப்படி ஆண்டுதோறும் உயர்கிறது? இது எந்த வகையில் நியாயம்
சாலைகள் சேதமடைந்து குழிகளாகக் கிடக்கும் பல இடங்களில் கூட, தடையின்றி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. "தரமான சாலைகளுக்குத் தான் வரி" என்ற வாக்குறுதி பல இடங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டிருககிறது.
சங்கிலித் தொடர் பாதிப்புகள்
சுங்கக் கட்டண உயர்வு என்பது கார் வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. இது ஒரு 'மறைமுக வரி'. காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கான கட்டணம் உயரும்போது, அந்தப் பொருட்களின் சில்லறை விலையும் தானாக உயர்ந்துவிடுகிறது. ஏற்கனவே கல்வி, மருத்துவம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் திணறி வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த கூடுதல் சுமை அவர்களின் சேமிப்பைப் பறிக்கிறது.
மக்களின் கேள்வி என்ன
"சாலை அமைக்க வாங்கிய கடனை வட்டியுடன் வசூலித்து முடித்த பிறகும் ஏன் செங்கல்பட்டு பரனூர் மாதிரியான சில சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன? 60 கிலோமீட்டருக்கு ஒரு முறை தான் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி அமைக்கப்படுவது இல்லை. ஏனெனில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் விதிகளின்படி (National Highways Fee Rules, 2008), இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், நிதர்சனத்தில் இது பல இடங்களில் மீறப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள தந்திரம் தான் காரணம்.
விலக்குகள் உள்ளது
இந்த 60 கி.மீ விதியில் ஒரு முக்கியமான விலக்கு உள்ளது. "தொழில்நுட்பக் காரணங்களுக்காகவோ அல்லது சாலையின் தன்மையைப் பொறுத்தோ (பாலம், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலை)" இந்தத் தூரத்தைக் குறைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. இந்த விலக்கைப் பயன்படுத்தியே பல சுங்கச்சாவடிகள் 30-40 கி.மீ இடைவெளியில் அமைக்கப்படுகிறது. ஒரே நெடுஞ்சாலையில் வெவ்வேறு நிறுவனங்கள் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டால், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி சுங்கச்சாவடிகளை அமைத்துக் கொள்கின்றனர். இது 60 கி.மீ விதியை மீறுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. பல நேரங்களில் சாலை அமைக்கப்படும்போது அது ஊருக்கு வெளியே இருக்கும். ஆனால், ஊர் விரிவடையும்போது அந்தச் சுங்கச்சாவடி நகருக்குள்ளேயே வந்துவிடுகிறது. இதனால் மக்கள் உள்ளூர் பயணங்களுக்குக் கூட கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மக்களை பாதிக்கும்
இதனிடையே ஒருமுறை சாலை வரி கட்டிய பிறகு, மீண்டும் ஒவ்வொரு முறையும் எதற்குப் பணம்?" - இதுதான் இன்று ஒவ்வொரு வாகன ஓட்டியின் மனதிலும் இருக்கும் ஆதங்கமாக உள்ளது. அரசு சாலைகளை ஒரு வணிகப் பொருளாகப் பார்க்காமல், மக்களின் அடிப்படைத் தேவையாகப் பார்க்க வேண்டும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்காத வரை, இது போன்ற 'ஆண்டுதோறும் உயர்வு' என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.
சாமானிய மக்களின் குரல்
சுங்க கட்டணம் மட்டுமல்ல.. மின் கட்டணம், சொத்து வரி, அரசு ஊழியர் சம்பளம் என ஆண்டு தோறும் அரசு எதனை உயர்த்த வேண்டும் என்றால், உண்மையில் அதற்கு எஜமானாக உள்ள மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். அதனை உயர்த்தாமல் மக்களிடம் வரியை மட்டும் உயர்த்துவது நியாயமில்லை என்பதே சமானிய மக்களின் குரல் ஆக இருக்கிறது. அரசு தனது வீணான செலவுகளைக் குறைத்து, நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டுமே தவிர, ஒவ்வொரு முறை நிதிப்பற்றாக்குறை ஏற்படும்போதும் சாமானியனின் சட்டைப் பையைத் தேடுவது எளிதானது.. ஆனால் தவறான வழிமுறை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications