டிடிவி தினகரன் ‘சமாதான கொடி’.. எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக அழைப்பு? - முடிவு யார் கையில்?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கும் 'சமாதானக் கொடி' காட்டும் வகையில் தினகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்த நிலையில், ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் கடுமையாக நிராகரித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், சாஃப்ட்டாகப் பேசியுள்ளார் தினகரன். தொடர்ந்து ஈபிஎஸ்ஸை கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த டிடிவி தின்கரனின் தொனி மாறியுள்ளது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழு வழக்கு
உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு நடத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அதன்படி பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் இறுதி விசாரணை நடத்தி வருகிறது.

அனைவருக்கும் அழைப்பு
இதற்கிடையே, தீர்ப்புக்குப் பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி அமைய மீண்டும் அனைவரும் இணைந்து செயல்படுவோம். பழைய சம்பவங்களை மறந்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஓபிஎஸ்ஸின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். துரோகியுடன் சேர்ந்து செயல்பட முடியாது என கடுமையாகத் தெரிவித்தார் ஈபிஎஸ்.

ஏற்றுக்கொண்ட தினகரன்
அதேநேரம், ஓபிஎஸ்ஸின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பேசியுள்ளனர். இதனால், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனினும், எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்யவே முயற்சி மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். இதுகுறித்து தினகரனிடமும் ஓபிஎஸ் தரப்பு பேசியதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் அழைப்பு
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும். அந்த உயரிய நோக்கத்தோடு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.

விரோதம் கிடையாது
மேலும் பேசிய தினகரன், எடப்பாடி பழனிசாமியிடம்கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடெல்லாம் எதுவும் கிடையாது. அவருடைய குணாதிசயத்தைத்தான் நான் திரும்பத் திரும்ப கண்டிக்கிறேனே தவிர, மற்றபடி அவருடனோ, அதிமுகவுடனோ எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சூசகம்
இத்தனை நாட்களாக எடப்பாடி பழனிசாமி பேச்சை எடுத்தாலே கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், திடீரென சாஃப்ட் ஆகப் பேசியிருப்பது தொண்டர்களிடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி, அனைவரும் இணைந்து செயல்படலாம் என டிடிவி தினகரனும் இறங்கி வந்திருக்கிறார் என்கிறார்கள்.

பின்னணி என்ன?
டிடிவி தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்திற்குப் பின்னணியில் இன்னொரு விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். 2024 தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக, அமமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறது பாஜக. அதன் காரணமாக தினகரனிடம் பேசி இருப்பதாகவும், அவர்கள் கொடுத்த சிக்னலின்படியே, இந்த இணைவை நோக்கி தினகரன் நகர்வதாகவும் கூறப்படுகிறது.

முடிவு எடப்பாடி கையில்
ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனும் இறங்கி வருவதால், அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அழைப்பை ஏற்று இணைந்து செயல்படுவாரா என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அதிமுக வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே ஈபிஎஸ்ஸின் முடிவு இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications