Exclusive: ஓபிஎஸ் கிட்ட ஆரம்பம் நல்லா இருக்கு.. ஃபினிஷிங் சரியில்லையே.. கே சி பழனிச்சாமி கலகல
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஆரம்பம் நல்லாதான் இருக்கிறது. ஆனால் முடிவு சரியில்லை என அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ₹4.5 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா பொதுத் துறை வங்கியில் இருந்து பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமதி மீனாள் அவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவரிடம் அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார். சசிகலா குறித்த இவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கருத்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு பேட்டி
இதுகுறித்து முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்த போது முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை டெல்லி சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

சசிகலா
அப்போது செய்தியாளர்களுக்கு தேனியில் பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்றார். அன்று அவ்வாறு சொன்ன இவர் நேற்றைய தினம் பரிசீலனை செய்வோம் என்கிறார். தேனியில் சகிகலாவுக்கு எதிராக பேசி 3 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் மாற்றியது ஏன்? தான் மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொல்கிறாரா இல்லை கட்சியை உண்மையில் ஒன்றுபடுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறாரா?

ஒன்றுப்பட்ட அதிமுக
ஒரு வேளை அதிமுகவை ஒன்றுப்படுத்த நினைத்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்ஸுக்கு தலைமை கழகத்தை கூட்டுவதற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவ்வாறு கூட்டும் பட்சத்தில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து வாதிடலாம் அல்லது அவருடைய சொந்த கருத்தை முன்வைத்திருக்கலாம். குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களிடம் ஒன்றுபட்ட அதிமுக எனக்கு தேவை. இதற்கு எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என ஓபிஎஸ் வேண்டுகோளையாவது வைத்திருக்கலாம்.

மாற்றி பேசக் கூடாது
இதையெல்லாம் விட்டுவிட்டு அவர் மாற்றி மாற்றி பேசுவது அவரது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. அவரது நிலைப்பாட்டை அவர் தெளிவாக அறிவிக்க வேண்டும். இப்படியெல்லாம் ஓபிஎஸ் செய்வதை பார்த்தால் கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் அடுத்த சட்டசபை தேர்தலில் (2026) முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதற்கான முயற்சியாகவே தெரிகிறதே ஒழிய கட்சியை ஒன்றுப்படுத்துவதற்காக அவர் பேசுவதாக தெரியவில்லை.

நீக்கியது ஏன்
எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா பதவி உள்ளிட்டவைகளில் மேற்கு மண்டலத்தினரே ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற கோபம் இவருக்கு இருக்கிறது என்றால் அந்த பதவிகளை இவர் விட்டுக் கொடுத்தது ஏன்? எந்த விஷயத்திலும் இவர் உறுதியாக இல்லையே. சசிகலாவுக்கு ஆதரவாக இத்தனை விஷயம் பேசுகிறார். ஆனால் பசும்பொன்னில் சசிகலா வருவதற்காக பாதுகாப்பு கேட்டு போலீஸிடம் கடிதம் அளித்த அதிமுகவின் முத்துராமலிங்கம் உள்ளிட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார். எதற்காக அப்படி செய்தார். நான் கையெழுத்திட மாட்டேன் என சொல்லியிருக்கலாமே. எனவே சசிகலா விவகாரம் உள்பட அனைத்திலும் அவர் தனது முடிவிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர மாற்றி மாற்றி பேசி தொண்டர்களை குழப்பக் கூடாது என கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications