காங்கிரஸ் வருத்தப்படக் கூடாது.. விஜய்யின் நோக்கம் அது ஒன்றுதான்.. ஓபனாக இறங்கி அடித்த கனிமொழி!
சென்னை: தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் வருத்தப்படக் கூடாது என்பதால் முதல்வர் விஜய் திடீரென தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு எந்த காலத்திலும் நமக்கு இருக்கக் கூடிய பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக தரப்பில் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்பிக்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ண்டஹ் 37 எம்பிக்கள் பங்கேற்கவில்லை.

அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையில் கடந்த ஆண்டு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் சமமான தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையே தேவையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்க கூடியவர்கள் காவிரி விவகாரத்தை பற்றி பேசுங்கள் என்றால், தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டம் போடுகிறார்கள்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தவெக மறுக்கிறது. ஏனென்றால் ஆட்சியில் உடன் இருக்கக் கூடிய சில இயக்கங்கள் வருத்தப்படுவார்கள் என்பதால்.. கர்நாடகாவில் அவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.
அவர்கள் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்பதால், தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டம் போட்டுள்ளார்கள். நாங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோம். கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்ட போது, இப்போது பேசி கொண்டிருக்கும் தவெக தங்களின் நிலைப்பாடு என்னவென்பதை கூட அறிவிக்கவில்லை.
முதல்முறையாக அதனை எதிர்த்து குரல் கொடுத்த இயக்கம் திமுக.. அதன் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள், பல்வேறு எதிர்க்கட்சிகளை அழைத்து கூட்டம் போட்டார் ஸ்டாலின். சட்டசபையிலும் சமமான தொகுதி மறுவரையறைக்காக தீர்மானம் போட்டது திமுக..
தேர்தலின் போதும் கூட நாடாளுமன்றம் சென்று தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து திமுக வாக்களித்து வீழ்த்தியது. நாங்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த காலத்திலும் நமக்கு இருக்கக் கூடிய பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
