"அப்பட்டமான கோழைத்தனம்.. சட்டசபைக்கு வரவிடாமல் தடுக்கவே இந்த கைது!" உதயநிதிக்காக கொந்தளித்த கனிமொழி
சென்னை: முதல்வர் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சொல்லி தவெக மகளிர் அணி அளித்த புகாரின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்று சாடியுள்ளார்.
திமுக சார்பில் சமீபத்தில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்போதே தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து தஞ்சை காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி நிர்வாகி சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்தின் முன்பு போலீசார் குவிந்தனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடனேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதயநிதி இல்லத்திற்கு விரைந்தார்.
தொடர்ந்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன், பின்னர் சபரீசன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உதயநிதி கைது செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திமுகவினரும் அதிகளவில் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
கடும் எதிர்ப்பையும் மீறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். உதயநிதி கைது மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இதை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினரும் கடுமையாக சாடி வருகிறார்கள். இதற்கிடையே திமுக எம்பி கனிமொழியும் உதயநிதி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டரில், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்" என்று அவர் கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
