கருணாநிதியின் ஜெயில் சாப்பாடு; ஸ்டாலினின் சிறை அனுபவம்! காவல் அதிகாரி வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் சிறை வாழ்க்கை பற்றிய நினைவுகளை ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நினைவு நாளை அவரது கட்சியின் தொண்டர்கள் அனுசரித்தனர். மெரினாவில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலைகள் வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி ஒன்றும் நடைபெற்றது.

Karunanidhi MK Stalin

அரசியல் பொதுவாழ்வில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் மு.கருணாநிதி. அது மட்டும் இல்லாமல் ஒரு பத்திரிகையாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, எழுத்தாளராகப் பல தளங்களில் தனது பங்களிப்பைச் செய்தவர் அவர். 1952இல் குளித்தலை தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான அவர், 2016 சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 13 தேர்தல்களில் போட்டியிட்ட மு.கருணாநிதி ஒருமுறை கூட தோல்வியை தழுவியதே இல்லை. திமுக நிறுவனர் அண்ணாதுரை 1969இல் மறைந்த பிறகு முதல்முறையாக முதல்வரான இவர் 1971 வரை ஆட்சியிலிருந்தார். அதன்பின்னர் 5 முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

திமுக தொடங்கி வைத்த பல போராட்டங்களை மிக வலிமையாக நடத்தியவர் கருணாநிதி. 1953இல் நடைபெற்ற டால்மியாபுரத்தை கல்லக்குடி என்று தமிழில் பெயர் மாற்றம் செய்ய கோரி திமுக போராட்டம் நடத்தியது. அதில் தீவிரமாகச் செயல்பட்டு சிறை சென்றவர். 1957இல் இந்தி எதிர்ப்பு போராட்டம், 1963இல் நடந்த இந்தி எதிர்ப்பு போர் என இவர் பலமுறை சிறைவாசம் பெற்றுள்ளார். அதைக் கொண்டே'பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே' என்று இவர் புகழப்பட்டார். இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்று டயலாக் எழுதும் அளவுக்குச் சிறை வாழ்க்கை இவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

Karunanidhi MK Stalin

ஆட்சியாளர்களை எதிர்த்து சிறை கம்பிகள் பின்னால் சில காலம் வாழ்ந்த மு.கருணாநிதியின் மற்றொரு வாழ்க்கை பற்றி ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசுகையில், "எனது பதவிக்காலத்தில் சிறைக்கு மூன்று முறை மு.கருணாநிதி வந்திருக்கிறார். ஸ்டாலின் கூட பலமுறை வந்துள்ளார். இந்தியாவிலேயே அதிக முறை போராட்டங்களின்போது கைதான தலைவர் ஸ்டாலின்தான். மிசாவை தவிர்த்து எத்தனையோ முறை கைதாகி இருக்கிறார். இன்று முதல்வராகப் பதவியில் அமர்ந்திருக்கிறார் என்றால் சும்மா கிடையாது. அவர் போராடி இருக்கிறார். உழைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை சிறைக்குள் வரும்போது தனி செல் வேண்டும் என ஸ்டாலின் கேட்டதே இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக அவரும் ஒரு கைதியாக இருப்பார். எந்த வசதியையும் கேட்க மாட்டார்.

தொண்டர்களுடன் கைதாகி வந்தால், அத்தனை பேரும் என்ன சாப்பிடுகிறார்களோ அதே உணவுதான் அவருக்கும் கொடுப்போம். தனியாக எதையும் தரவேண்டாம் என முன்கூட்டியே சொல்லிவிடுவார். வீட்டிலிருந்து சிறைக்கு யாராவது உணவு கொண்டுவந்தால் கூட அதை வாங்க மாட்டார். 2000 பேருக்கு திடீரென்று சிறையில் சமைக்க வேண்டும் என்றால், சில நேரங்களில் இரவு 1 மணிகூட ஆகிவிடும். அப்போது பொறுமையாக இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்.

Karunanidhi MK Stalin

ஆனால், கருணாநிதியால் அப்படி இருக்க முடியாது. அவர் முதல்வராக இருந்தவர். அவர் நினைத்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கவே முடியாது. ஆகவே அவருக்குத் தனி அறைதான் தருவோம். ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். எனவே எச்சரிக்கையாக நாங்கள் இருப்பது கடமை. கருணாநிதி கூட சிறைக்கு வந்த காலத்தில் எந்தளவுக்குச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமோ அதன்படி நடப்பார். அறைக்கு ஏசி கொடுங்கள், ஃபேன் போடுங்கள் என்று அவர் எந்த சலுகையும் கேட்டதில்லை. கைதிகளுக்கு என்ன சாப்பாடு போடுகிறோமோ அதையே சாப்பிடுவார்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கைதிகள் அனைவருக்கும் ஏ கிளாஸ் சாப்பாடுதான் போடவேண்டும் எனச் சட்டமே போட்டார். பி கிளாஸ் சாப்பாடு என்றால், மூன்று நாட்கள் காலை கஞ்சி கொடுப்போம். 2 நாட்கள் உப்புமா, 2 நாட்கள் பொங்கல் போடுவோம். கஞ்சியில் கேழ்வரகு, அரிசி என மூன்று விதமாக போடுவோம். மதியம் 400 கிராம் அரிசி. அதைச் சமைத்தால் 800 கிராம் வரை வரும். சாம்பார், பொரியல், மோர் கொடுப்போம். மாலை 3 மணிக்கு 60 கிராம் சுண்டல்.

இரவு உணவு மாலை 5 மணிக்கே போட்டுவிடுவோம். 350 கிராம் அரிசி. அதன் சாப்பாடு அளவு 700 கிராம் வரும். குழம்பு சாம்பார் தருவோம். இரவில் மோர் இருக்காது. ஜெயில் சாப்பாடு என்பது சிறப்பானது. எல்லா சத்துகளும் சம அளவில் சீராகக் கிடைக்கும். அதையே வாழ்நாள் முழுக்க சாப்பிட்டால், சர்க்கரை நோய், பிபி எதுவும் வராது.

ஏ கிளாஸ் சாப்பாடு எப்படி இருக்கும் என்றால், காலையில் கஞ்சிக்குப் பதிலாகக் காலை உப்புமா, கோதுமை தோசை, டீ கொடுப்போம். 450 கிராம் பால் கொடுப்போம். மதியம் சாப்பாடு தருவோம். அதற்கு நெய் கொடுப்போம். அதுவே அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் 110 கிராம் மட்டன், 140 கிராம் பால் கொடுப்போம். இது இல்லை என்றால் முட்டை தருவோம். கருணாநிதியின் சாப்பாடு மிகமிக எளிமையாகவே இருக்கும். பெரிய ஆடம்பரம் எதுவுமே இருக்காது"என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+