அந்த 2 "இனிஷியல்".. போகிற போக்கில் சீக்ரெட்டை உடைத்த திருச்சி சூர்யா.. அண்ணாமலைக்குத்தான் சிக்கல்!
சென்னை: பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று திருச்சி சூர்யா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் ஒரு விஷயம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுக்குத்தான் காலை சுழற்றி.. டேபிளை உடைச்சி.. இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணீங்களா என்று சொல்லும் அளவிற்கு தமிழக பாஜகவிற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடிக்கொடுத்துவிட்டு.. கட்சியில் இருந்து... வரட்டா மாமே டூர்ர்ர் என்று கிளம்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. இவரின் ஒரு ஆடியோ.. காயத்ரி ரகுராம்.. டெய்சி சூர்யா.. கேசவ விநாயகம்.. அண்ணாமலை என்று பலரின் அரசியல் வாழ்க்கையில் டி 20 ஆட்டம் ஆடி உள்ளது.
இதெல்லாம் போக நேற்று சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாக திருச்சி சூர்யா எழுதிய கடிதத்தில் வேறு ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தையும் குறிப்பிட்டு உள்ளார். 2 பேரை மாட்டிவிட்டுவிட்டு திருச்சி சூர்யா டாட்டா காட்டி இருக்கிறார்.
திருச்சி சூர்யாவின் ஓயாத அதிரடி- பாஜகவில் இருந்து வெளியேற காரணமே 'நீங்க'தான் பிரதர்...பொளேர் போடு!

என்ன நடந்தது?
இந்த பிரச்சனையின் தொடக்கம் என்பது ஒரு ஆடியோவில் இருந்து ஆரம்பித்தது. பாஜகவில் உறுப்பினராக இருந்த திருச்சி சூர்யாவிற்கு - டெய்சி சரணுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் போனில் கடுமையான சண்டை நடந்தது . சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார். இதுதான் பிரச்சனையின் தொடக்கம்.

அடுத்தடுத்து சம்பவங்கள்
இந்த ஆடியோவை தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் கட்சியில் நடந்தன.
1. ஆடியோ ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.
2. ஆடியோவை காயத்ரியும் அதைபின் பகிர்ந்து.. இவரின் கையை எடுக்க முடியுமா என்று அண்ணாமலையை கேள்வி கேட்டு இருந்தார்.
3. காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
4. அந்த ஆடியோவில் இருப்பதுதான்தான் என்று டெய்சி - சூர்யா இருவரும் ஒப்புக்கொண்டனர்.
5. நாங்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம். நாங்கள் இருவரும் அக்கா - தம்பியாக தொடருவோம் என்று கூட்டாக பேட்டி கொடுத்தனர்.
6. இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதால் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதிய சிக்கல்
பாஜகவில் இந்த புயல் ஓய்ந்த நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகி வருகிறது. அந்த புயல் இன்று மாலைதான் உருவாகும் என்று வானிலை மையம் சொன்ன நிலையில்.. நான் இன்னொரு புயலை கிளம்புகிறேன் பார் என்று சூர்யா இன்னொரு புயலை நேற்று கிளப்பிவிட்டார். பாஜகவில் இருந்து வெளியேறுவதாக திருச்சி சிவா தெரிவித்து உள்ளார். அதில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி, என்று குறிப்பிட்டு உள்ளார்.

பெயர்
இதில் பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை நேரடியாக திருச்சி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். இதெல்லாம் இருக்க நேற்று இன்னொரு அறிக்கை ஒன்றை திருச்சி சூர்யா வெளியிட்டார். அதில், தமிழ்நாடு பாஜகவின் எதிர்காலம் அண்ணாமலைதான். அண்ணாமலைதான் அடுத்த தமிழ்நாடு முதல்வர். இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகவும் வாய்ப்பு உள்ளவர் இவர்தான். இவர்தான் பாஜகவின் எதிர்காலம். இளம் வயதில் கட்சியில் மிகப்பெரிய தலைவராக அண்ணாமலை உருவெடுத்து இருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றெல்லாம் திருச்சி சூர்யா பாராட்டி உள்ளார். ஆனால் போகிற போக்கில் முக்கியமான இரண்டு பெயரை மாட்டிவிட்டுள்ளார்.

எல் முருகன்
எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோரின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவார். இவர்கள் நான் இல்லாமல் இனி சந்தோசமாக இருப்பார் என்று திருச்சி சூர்யா, எல் முருகன், கேசவ விநாயகம் மீது புகார்களை அடுக்கி உள்ளார். அதோடு நீங்கள் உங்கள் விளையாட்டுகளை காயத்திரி (LM) மற்றும் டெய்சி (KV) ஆகியோருடன் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதாவது காயத்திரி பெயருக்கு பின் எல் முருகன் இனிஷியலையும், டெய்சி பெயருக்கு பின் கேசவ விநாயகம் இனிஷியலையும் போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. போகிற போக்கில் பாஜகவில் புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளார். பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்களை சீண்டி... கட்சிக்குள் அண்ணாமலைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார் திருச்சி சூர்யா.