கோவிலில் நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலர்- 'சஸ்பெண்ட்' அர்ச்சகர் வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சேலம் அருகே நைட்டியுடன் கோவிலுக்கு வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்ததால் பணி பறிபோன அர்ச்சகர் கண்ணன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலத்தை அடுத்த அம்மாபேட்டையில் உள்ளது சீதா ராமச்சந்திரன் கோவில். இதில் அர்ச்சகராக பணிபுரிபவர் கண்ணன். அண்மையில் சேலம் மாநகராட்சியின் 40வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா ராஜ்மோகன், இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது மஞ்சுளா நைட்டி அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கவுன்சிலராகவே இருந்தாலும் கோவில் கட்டுப்பாடுகளை மதித்து முறையான உடைகளை அணிந்து வர வேண்டும் என கண்ணன் கூறியிருக்கிறார். இதனால் கவுன்சிலர் மஞ்சுளாவின் ஆதரவாளர்களுக்கும் கண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மஞ்சுளாவின் ஆதரவாளர்கள், கண்ணனைத் தாக்கவும் முயன்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திடீரென அர்ச்சகர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதாவது ஆகம விதிகளுக்கு முரணாக இரவு 12 மணிவரை கோவில் நடையை திறந்து வைத்தார் கண்ணன்; கோவிலுக்கு வரும் பெண்களிடம் அவர் முறையாக நடந்து கொள்ளவும் இல்லை என்பவை கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட சொல்லப்பட்ட காரணங்கள்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்னன் வழக்கு தொடர்ந்தார். தம் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கண்ணன் மனுத் தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இவ்வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.