அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு.. மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முக்கிய நபரான ஜான், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் எனக்கூறி, கடந்த ஜூன் 8 ஆம் தேதி திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு தனக்கு எதிராக அவதூறான செய்தி வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரி தவெகவைச் சேர்ந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்கிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'தனக்கு எதிரான அவதூறு செய்தி பரப்பியதற்காக மு.க ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங், முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு வெளியிட வேண்டும். தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்கிற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போதைப்பொருள் வழக்கின் முக்கிய நபரான ஜான் பிரிட்டோவிற்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அமைச்சரின் உறவினர் பி. ஜான் பிரிட்டோ என்பவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி திமுக, அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
