• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமரசம் உலாவும் இடம்..சாவிலும் சடலத்தை புதைப்பதிலும் சாதியா?..பொது மயானம் தேவை..ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை:

இறப்பிலும் சடலத்தை புதைப்பதிலும் சாதிய பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் பொது சுடுகாடு, இடுகாடு அமைத்து சாதி பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எத்தனையோ தீர்ப்புகள் அளித்துள்ளனர். ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஹைகோர்ட் நீதிபதிகள், மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றி, மாற்றத்தை அரசு துவங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Madras High Court ordered the establishment of a public cemetery

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே,
சாதியில் மேலோர் என்றும்,
தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது,
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு,
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு,
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே." புகழ்பெற்ற இந்த திரைப்படப் பாடலை, ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2008, 2009-ல் இரண்டு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

பொது சுடுகாடு, இடுகாடு அமைத்து சாதி பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழிந்தபாடில்லை.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 கோடி தலித் மக்கள் வாழ்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தின் 17-வது விதி, அனைத்து வகையான தீண்டாமைகளுக்கும் முடிவு கட்டிய போதிலும் பொது சுடுகாடு, இடுகாடு என்பதும், அவற்றில் புதைப்பதும் எரிப்பதும், இறந்துபோன தலித்தின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்வது என்பதும் இன்னும் கனவாகவே இருக்கிறது.

மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க நிரந்தரமாக இடம் ஒதுக்க கோரி, கலைச்செல்வி மற்றும் மாலா ராஜாராம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அருந்ததினருக்கு மயானம் அமைக்க தகுந்த நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், சாதி பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களும் பொது மயனாங்களை பயன்படுத்த உரிமையுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு மடூர் கிராமத்தில் பொதுவான இடத்தில் மயானம் அமைக்க ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தமிழகத்தில் உள்ள மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொது மயனாங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

பொது மயானங்களை அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்படுவோருக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சாதி, மத சகிப்புத்தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை சம்பந்தமான தகவல்களை பாடப்புத்தகங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்து, நீதிபதி மகாதேவன் வழக்கை முடித்து வைத்தார்.

இந்த நிலையில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொடரப்பட்ட அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள் என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ள நிலையில், வண்டிப்பாதையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடலை தோண்டி எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முத்துசாமி, அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் சாதிய கட்டுக்களை உடைத்தெறிய முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற அரசும், சாதிய ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றி, மாற்றத்தை அரசு துவங்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

English summary
The Madras High Court Judges have said that the journey of a man towards the God should be started with equality, and the government should start the change by making graveyards common to all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X