மக்களை தேடி மருத்துவம்.. ஸ்டாலினின் சூப்பர் திட்டம்.. என்னென்ன சேவை... எப்படி கிடைக்கப் போகிறது?
சென்னை : தமிழகத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் உண்மையிலோ மகத்தான திட்டம் ஆகும். இன்று முதல் தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்தள்ள திட்டம், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வர முடியாதவர்கள், மருத்துவமனைகள் தொலைவில் உள்ள பகுதி மக்களுக்கு பயனுள்ள திட்டமாகும்.
இப்போது மக்களுக்கு எல்லா சேவைகளுமே வீடு தேடி வரத்தொடங்கிவிட்டது. வீடு தேடி வங்கி சேவை, வீட்டுககே உணவுடெலிவெரி, வீட்டுக்கே பொருட்கள் அனைத்தும் டெலிவரி என எல்லா சேவையும் தேடி வரத்தொடங்கிவிட்டது. ஏன் கல்வி கூட இப்போது வீடு தேடி வந்துவிட்டது.
ஆன்லைனில் கல்வி கற்று வருகிறார்கள் மாணவர்கள். இந்நிலையில் தான் மக்களை தேடி மருத்துவம் போக வேண்டும் என்று விரும்பிய முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணப்பள்ளி என்ற குக்கிராமத்திற்கு நேரடியாக சென்று தொடங்கி வைத்துள்ளார். இதுவும் பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டில் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்சனையில் உள்ளார்கள்.இவர்கள் தினசரி மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும். அவர்கள் இதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேணடும்.மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மருந்தைவாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால் மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியாத ஏழைகள், அரசு மருத்துவனைக்குத்தான் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருந்து, மாத்திரைகள் இலவசமாக தரப்படுகிறது.

உயரிய நோக்கம்
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நோயாளிகள் பலர் மருத்துவனைக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இத்தகைய சூழலில் நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் வீடு தேடி போய் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்.

டயாலிசிஸ் சிகிச்சை
தற்போது அரசு மருத்துவமைனைக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ பணியாளர்கள் நேரடியாக வழங்குவார்கள். இதுமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு அவர்கள் வீட்டிற்கே எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய போர்டபிள் டயாலிசஸ் கருவியை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உள்ளார்கள். இத்திட்டம் கிராமப்புறங்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்களுக்கு அற்புதமான வரப்பிரசாதம் ஆகும்.

எப்படி செயல்படுத்தப்படும்
திட்டத்தின் தொடக்கத்தில் 20 லட்சம் பேருக்கு மருந்து மாத்திரைகளை அளிக்க முடிவு செய்துள்ள அரசு, அதனைப் படிப்படியாக ஒரு கோடி பேருக்கு திட்டத்தை விரிவுபடுத்தமுடிவு செய்துள்ளது. சரி இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை இப்போது பார்ப்போம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஹெல்த் சப் சென்டர்களுக்கு மருந்துகளை எடுத்துச்செல்ல ஒருவாகனம் வாடகைக்கு எடுக்கப்படும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு மருந்துகளின் வீட்டு விநியோகத்திற்காக பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பிராண்டட் மருந்து பெட்டி ஒருமுறை வழங்கப்படும். திட்டத்தின் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 50 யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் பிளாக்குகளில் 1172 சுகாதார மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமூக சுகாதார மையங்கள் உள்ளடங்கும். கூடுதலாக இந்த திட்டம் திருநெல்வேலி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிளில் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொண்டுவரப்படும்.

முதல்வர் உத்தரவு
2021ம் ஆண்டில் இறுதியில் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் தற்போதைய செலவு தவிர இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.257,15,78,350 செலவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டங்களில் பல்வேறு நிலை சுகாதார நிறுவனங்கள், மாநிலத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பு மூலம் திட்டத்தை செயல்படுத்த பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநகரத்திற்கு அங்கீகாரம் அளிக்கவும், தமிழ்நாடு தேசிய சுகாதார திட்டத்தின் தொற்றுநோயற்ற நோய்கள் செல் மூலம் திட்டத்தை கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலின்
இந்த திட்டத்தில் டயாலசிஸ் பைகளை வழங்குவது முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே "மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்" மற்றும் "ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீரழிவு நோயாளிகள்
வீடு தேடிவரும் இத்திட்டத்தில் என்னென்ன இலவச மருத்துவ சேவைகள் அரசு செய்ய உள்ளது என்பதை பார்ப்போம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேயையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

95 கோடி மக்கள்
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வளர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும். இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகளங்கள் ஈடுபடுத்தப்படும். பயனாளிகளிகளின் சேவைக்காக இத்திட்டத்தின் முதற்கட்ட இயக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம், ஆண்டு இறுதியில் மாநில அளவில் "அனைவருக்கும் நலவாழ்வு' என்ற உயரிய இலக்கை அடைய இந்த திட்டம் வழிவகுக்கும். இந்திட்டம்' சூாகிரியில் தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மதுரை. கோயம்புத்தூர், சேயம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications