கூடுவாஞ்சேரி பெண் பேராசிரியை பூந்தமல்லியில் இருந்த கோலம்.. இப்படியும் நடக்குதா.. ஆடிப்போன போலீஸ்
சென்னை: சென்னை பூந்தமல்லியில் 33 வயது இளம்பெண் ஒருவர், கையில் பைகளுடன் அங்கும் இங்குமாக சாலையில் சுற்றித்திரிந்தார். தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டும், கையில் குச்சியை வைத்துக்கொண்டு சாலையில் செல்வோருக்கு பாடம் நடத்துவதுமாக இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், பெண்ணிடம் பேசிய போது, அவர் பேராசிரியை என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்தார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மனிதம் ஒன்று தான்மாறாமல் இருக்கும் ஒருவிஷயம் என்பதை பல சம்பவங்கள் நிரூபிக்கின்றன. என்ன தான் உயரத்திற்கு போனாலும், என்னதான் படித்தாலும், என்னதான் சொத்துக்கள் இருந்தாலும், யாருக்கும் இங்கு எதுவும் நிலையில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. மிகப்பெரிய செல்வந்தர், அவர் வாழ்க்கை மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருந்தது. அவரால் என்ன வேண்டும் என்றாலும் வாங்க முடியும். ஆனால் அவரது ஒரே மகன் விபத்தில் இறந்து போனார்..

அதேபோல் மிகப்பெரிய படிப்பாளி, நல்ல அறிவு உடையவர், நன்கு படித்து சிறப்பான பதவியில் இருந்தவர்.. நல்ல செல்வமும்இருக்கிறது. திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு, பைத்தியம் ஆகிப்போனார். யாருக்கு வாழ்க்கை எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது.. எனவே முடிந்த வரை மனிதநேயத்துடன்இருக்க வேண்டும். பூந்தமல்லியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை அடுத்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 33 வயது இளம்பெண் ஒருவர், கையில் பைகளுடன் அங்கும் இங்குமாக சாலையில் சுற்றித்திரிந்தார். தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அத்துடன் கையில் குச்சியை வைத்துக்கொண்டு சாலையில் செல்வோருக்கு பாடம் நடத்துவதுமாக இருந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அந்த பெண், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதை இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி கண்டார்.
அந்த பெண் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது அதில், அவர் பட்டப்படிப்பு படித்ததற்கான சான்றிதழ்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பையில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி நடத்திய விசாரணையில் அந்த பெண், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் என்பதும், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்ததும், சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டதும் தெரியவந்தது.
சற்று மன அழுத்தத்தில் இருந்ததால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம். வீட்டில் இருந்து சென்றவர் ஒரு மாதமாக திரும்பி வரவில்லை. சென்னையில் தங்கி வேலை செய்து வருவதாக அவரது குடும்பத்தினர் நினைத்து கொண்டிருக்கிறார்ர்கள். ஆனால் பேராசிரியை சரியாக மாத்திரைகள் சாப்பிடாமல் விட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு பூந்தமல்லியில் சாலையில் சுற்றித்திரிவதும் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரது பெற்றோரை பூந்தமல்லி வரும்படி அழைத்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் வரும் வரை அமர வைத்து, அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர் அதை சாப்பிட்ட அந்த பெண், மீண்டும் கையில் கம்பை எடுத்துக்கொண்டு பேராசிரியை போல் சாலையில் நடந்து சென்று பாடம் எடுக்க தொடங்கினார். இந்நிலையில் பூந்தமல்லி வந்த அவரது பெற்றோரிடம் மனநிலை பாதிக்கப்பட்ட பேராசிரியையை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications